2ஜி’ வழக்கில் தொடர்புடையவர்கள் தப்ப முடியாது: நீதிபதிகள் கண்டிப்பு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்குடன் தொடர்புடைய வரி ஏய்ப்பு வழக்குகளில், வருமான வரித்துறையின் விசாரணை திருப்தி அளிப்பதாக இல்லை; விசாரணையில் வேகம் இல்லை’ என, சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய எவரும் தப்ப முடியாது என்றும் கோர்ட் கண்டிப்பாக தெரிவித்தது.

“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, அரசின் பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வரும் விசாரணையை கண்காணிப்பதில் அரசுக்கு உதவ இரண்டு தனிநபர்களை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி, பொது நல அமைப்பு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று நீதிபதிகள் சிங்வி மற்றும் கங்குலி ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்குடன் தொடர்புடைய வரி ஏய்ப்பு வழக்குகளில், வருமான வரித்துறையின் விசாரணை திருப்தி அளிப்பதாக இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக புகார் மனு பெற்றது, கம்பெனிகளின் தொடர்பு அதிகாரி நிரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்தது முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருமான வரித்துறையினர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு சாதாரண வரி ஏய்ப்பு வழக்கு அல்ல. அதனால், இது தொடர்பான விசாரணையை மிக விரைவாக நடத்த வேண்டும். சாதாரண வழக்குகளைப் போல, இந்த வழக்கையும் சாதாரணமாக கையாளக் கூடாது. விசாரணையை துரிதப்படுத்தி, வருமான வரித்துறையினர் விரைவில் முடிவை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த வருமான வரித்துறையினர், “வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணைகள் ஐந்தாவது கட்டத்தை எட்டியுள்ளன. மெதுவாக நடக்கின்றன என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்றனர். இந்தப் பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள் கூறியதாவது: உங்களின் பதில் எங்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. விசாரணை எந்தக் கட்டத்தில் உள்ளது என்பதைப் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. விசாரணையில் கிடைத்த முடிவுகள் தான் எங்களுக்கு அவசியம். ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கம்பெனிகளின் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த, ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்கும் தனி நீதிபதியை வருமான வரித்துறையினர் அணுக வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அரசின் பல்வேறு நிறுவனங்கள் நடத்தும் விசாரணையை கண்காணிக்க, கோர்ட்டிற்கு உதவியாக இரண்டு தனி நபர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய பொது நல மனுவை நாங்கள் விசாரணைக்கு ஏற்கிறோம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்கள் எந்த அதிகாரத்தில், பதவியில், வசதி வாய்ப்புடன் இருந்தாலும், அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவர். அதை கோர்ட் உறுதி செய்யும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

தப்ப முடியாது: இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த சி.பி.ஐ., “ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. ரிலையன்ஸ் மற்றும் டாடா நிறுவனங்களுக்கும் ஊழலில் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. “2ஜி’ ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பான புதிய விசாரணை அறிக்கை, கோடை விடுமுறைக்குப் பின் தாக்கல் செய்யப்படும்’ என தெரிவித்தது. பொது நல அமைப்பு சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷன், “”2ஜி லைசென்ஸ் பெற ரிலையன்ஸ் காம் நிறுவனத்திற்கு தகுதியில்லை. அதனால், சுவான் டெலிகாம் நிறுவனம் மூலம் இதைப் பெற்றுள்ளது. “”ரிலையன்ஸ் தலைவர் அனில் அம்பானிக்கு இந்த நிறுவனத்தில் 50 சதவீத பங்கு உள்ளது. இவரை காப்பாற்ற சி.பி.ஐ., முற்படுகிறது. அவரது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு எதிராக மட்டுமே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது,” என்றார். வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். வழக்கு விசாரணையை கண்காணிக்க இரண்டு தனிநபர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அன்றைய தினம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *