25ம் தேதி முதல் சென்டாக் நுழைவு தேர்வு விண்ணப்பம் -20-05-2011

posted in: கல்வி | 0

புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., பொறியியல் உள்ளிட்ட தொழில்படிப்புகளுக்கான சென்டாக் விண்ணப்பங்கள், வரும் 25ம் தேதி முதல் தபால் நிலையங்களில் வினியோகிக்கப்படுகிறது.

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், காலியாக உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டெக்., பி.பார்ம்., பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட படிப்புக்களுக்கான மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் நிரப்பப்படுகிறது. இந்தாண்டிற்கான சென்டாக் விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பங்களை, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள முதன்மை, கிளை தலைமை தபால் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம். புதுச்சேரி பொறியியல் கல்லூரி கூட்டுறவு பண்டக சாலையிலும் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை 550 ரூபாய். எஸ்.சி., – எஸ்.டி., மாணவர்களுக்கு 275 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

தபாலில் வழங்க சிறப்பு ஏற்பாடு: தபாலில் பெற விரும்புவோர், 565 ரூபாய்க்கு, “தி கன்வீனர், சென்டாக்” என்ற பெயருக்கு புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் டி.டி., எடுத்து , “கன்வீனர், சென்டாக், புதுச்சேரி பொறியியல் கல்லூரி, புதுச்சேரி-605014” என்ற முகவரிக்கு ஒரு வேண்டுகோள் கடிதத்துடன், இரண்டு சுய முகவரி தபால் உறைகளை இணைத்து அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினர் 315 ரூபாய்க்கு டி.டி., எடுத்தால் போதுமானது. அடுத்த மாதம் 22ம் தேதி வரை தபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

ஆன்-லைனில் விண்ணப்பங்கள்: வரும் 20ம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. www.centacprof.net.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் 18ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பங்கள் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அடுத்த மாதம் 22ம் தேதி மாலை 5 மணிக்குள் சென்டாக் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப படிவ பற்றாக்குறையை தவிர்க்க இந்தாண்டு 8,000 விண்ணப்பங்கள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் அச்சடிக்கப்படும் என சென்டாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *