கருணாநிதி கவிதைக்காக சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தமா?முதல்வர் ஜெயலலிதா பேட்டி

posted in: அரசியல் | 0

சென்னை : “”கருணாநிதி கவிதை எழுதினார் என்பதற்காக, சமச்சீர் கல்வித் திட்டத்தில் நாங்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.

ஒட்டுமொத்தமாக, குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்,” என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டையில், நேற்று முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டி:

தனியார் பள்ளிகள் கட்டணம் தொடர்பான பிரச்னையில், அரசு தலையிட வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்துகிறார்களே?

இது தொடர்பாக, எந்தவித மனுவும் இதுவரை பெறப்படவில்லை. பெற்றோர்களோ, பள்ளிகளோ, அரசு தலையிடக்கோரி கேட்டுக்கொண்டால், அவர்களின் பிரச்னைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

இந்த பிரச்னை தொடர்பாக, போராட்டம் நடத்துகிறார்களே?

நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ஏற்கக் கூடியதாக இல்லை என்று பள்ளிகள் கருதினாலோ அல்லது இந்த விவகாரத்தில் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் நினைத்தாலோ, அரசிடம் முறையிடலாம். போராட்டம் நடத்துவது தேவையற்றது.

இலவச அரிசி வழங்கும் திட்ட விழாவை ஆடம்பரம் இல்லாமல், எளிமையாக நடத்தியிருக்கிறீர்கள். இதேபோல், அனைத்து அரசு விழாக்களும் நடைபெறுமா?

நிச்சயமாக! வீண் ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும், வீண் செலவை தவிர்க்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இன்று நிறைவேற்ற முடிந்ததை எண்ணி உள்ளம் பூரிப்படைகிறேன்.

ரேஷன் கடைகளில், அனைத்து நாட்களிலும் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

அப்படித்தான் நடக்கிறது.

இல்லையே… ஒரு சில கடைகளில், அப்படி பொருட்கள் வழங்குவதில்லையே?

கடந்த கால தி.மு.க., ஆட்சியில் அப்படி நடந்தது, இப்போது கிடையாது. மக்கள் எப்போது வேண்டுமானாலும், என்றைக்கு வேண்டுமானாலும் சென்று, தேவையான பொருட்களை பெறலாம்.

பொது வினியோகத் திட்டத்தில் வழங்கப்படும் பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டதுடன், ஓட்டல்களிலும் அவை பயன்படுத்தக்கூடிய நிலை இருந்தது. அது ஒழிக்கப்படுமா?

தி.மு.க., ஆட்சியில் தான் அப்படி நடந்தது. இந்த ஆட்சியில் கிடையாது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், இதுபோன்ற எந்த புகாரும் பெறப்படவில்லை. எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த கால கட்டத்திலோ அல்லது நான் முதல்வராக இருந்த கால கட்டத்திலோ, இதுபோன்ற தவறுகள் நடந்ததில்லை.

“டி.ஜி.பி.,யாக லத்திகா சரணை நியமனம் செய்தது செல்லாது’ என, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தீர்ப்பு கூறியுள்ளது. இதனால், அடுத்த டி.ஜி.பி.,யாக நட்ராஜ் நியமிக்கப்படுவாரா?

நேற்று தான் தீர்ப்பு வந்தது. அதை முழுமையாக ஆய்வு செய்த பின், அரசின் கருத்தை தெரிவிப்போம்.

பொறியியல் கவுன்சிலிங், சென்னையில் மட்டும் நடைபெறுமா? அல்லது, வேறு நகரங்களிலும் நடத்தப்படுமா?

சம்பந்தப்பட்ட துறையிடம் ஆலோசித்த பின் அறிவிக்கப்படும்.

அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களை ஒருங்கிணைக்க திட்டமிட்டிருப்பதாக, பத்திரிகைகளில் செய்தி வந்தது குறித்து?

இது தொடர்பாக, ஏற்கனவே நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்துள்ளோம். மூன்றாம் தேதி கவர்னர் உரை நிகழ்த்த இருக்கும் போது, அனைத்து விவரங்களையும் இப்போது வெளியிடுவது சரியாக இருக்காது.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக, “நான் எழுதிய கவிதைகளை மட்டும் நீக்கிவிட்டாவது, திட்டத்தை அமல்படுத்தலாமே’ என்று, முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறாரே?

இந்த பேச்சு, குழந்தைத்தனமானது. அவர் கவிதை எழுதினார் என்பதற்காக, நாங்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஒட்டுமொத்தமாக, குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்.இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *