திமுக தலைவர் கருணாநிதிக்கு நாளை 88 வயது-தலைவர்கள் வாழ்த்து

posted in: அரசியல் | 0

சென்னை : திமுக தலைவர் கருணாநிதிக்கு நாளை 88 வயது பிறக்கிறது. இதையொட்டி தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு நாளை 88 வயது பிறக்கிறது. இதையொட்டி திமுக சார்பில் சென்னையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

வாழ்த்திப் பேசுகிறார் குஷ்பு

கருணாநிதி பிறந்த நாள் விழா இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கருணாநிதியை வாழ்த்திப் பேசவுள்ளனர்.

மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது. நிகழ்ச்சிக்கு முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் தலைமை தாங்குகிறார். பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி கலைஞர் வாழ்த்துப் பாடல் பாடுகிறார்.

இதைத் தொடர்ந்து அண்ணா நூலகம் என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து, வள்ளுவர் கோட்டம் என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன், அறிவாலயம் என்ற தலைப்பில் திண்டுக்கல் லியோனி, திரைக்காவியம் என்ற பெயரில் நடிகை குஷ்பு, தொல்காப்பியப் பூங்கா என்ற தலைப்பில் அப்துல் காதர் ஆகியோர் பேசுகின்றனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

இந்த நிலையில் கருணாநிதிக்கு பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தின் முதல்வராகவும் மற்றும் பல்வேறு நிலைகளிலும் 87 ஆண்டுகளாக தமிழக முன்னேற்றத்திற்காக அயராது கலைஞர் உழைத்து வருகிறார். தற்போது இறைவன் அருளால் 88 வது வயதை அடைகிறார்.

எல்லாம் வல்ல அன்னை சக்தியின் அருளால் கலைஞரும் அவரது குடும்பத்தாரும் எல்லா நலமும் பெறுவதுடன், எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்ந்து சிறப்பிக்க அன்னை சக்தியை வேண்டிக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *