மேவாட் (அரியானா): அரசு சுகாதார மையங்களில், பெண்களுக்கான இலவச பிரசவ மருத்துவ திட்டத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று துவக்கி வைத்தார்.
பிரசவ காலங்களில் தாய், சேய் இறப்பு விகிதங்களை குறைக்கும் வகையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், இப்புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரியானா, மேவாட்டில் நடந்த விழாவில் திட்டத்தை துவக்கிவைத்து காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாவது: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், பிரசவத்தின் போது 67 ஆயிரம் பெண்கள் இறக்கின்றனர். அதுபோல், பிறந்த ஒரு மாதத்தில் ஒன்பது லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர். இதுபோன்ற ஒரு சூழலில், அரசின் இப்புதிய திட்டத்தால், தாய், சேய் இறப்பு விகிதம் கணிசமாக குறையும். இத்திட்டத்தின் கீழ் மருந்துகள், பரிசோதனைகள், இலவசமாக வழங்கப்படுவதுடன், தேவைப்படும் பட்சத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்தமும் இலவசமாக வழங்கப்படும். சில நேரங்களில், பெரிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவேண்டிய கட்டாயம் ஏற்படும் பட்சத்தில், அந்த செலவுகளையும் அரசே ஏற்கும். பிறக்கும்போதே பலவீனமாக பிறக்கும் குழந்தைகளுக்கு முப்பது நாட்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். இத்திட்டத்தை எல்லா மாநிலங்களும் செயல்படுத்தும் என நம்புகிறேன்.
தேசிய ஊரக சுகாதார இயக்கம் என்ற இத்திட்டம், கடந்த 2005ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் துவங்கப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்தாலும், சிக்கல் இல்லாமல் பிரசவம் நடைபெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். கர்ப்பிணி பெண்கள் வீட்டிலிருந்து, மருத்துவமனை வரை வருவதற்கு இலவசமாக வாகன வசதியும், கர்ப்ப காலங்களில் பெண்கள் உட்கொள்ளும் பத்திய உணவுகளும் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு சோனியா பேசினார்.
Leave a Reply