இஸ்லாமாபாத்:இந்தியாவின் முக்கிய நகரங்களை தாக்கும் விதத்தில், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் 24 ஏவுகணைகளை இந்தாண்டின் இறுதிக்குள் தயாரித்து ராணுவத்தில் சேர்க்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
“குறைந்தபட்ச தடை பராமரிப்பு’ என்ற திட்டத்தின் கீழ், பாகிஸ்தான் இந்தாண்டின் இறுதிக்குள் 24 ஏவுகணைகளை தயாரிக்க உள்ளது. இத்திட்டம், அந்நாட்டு ராணுவத்தின் அணு ஆயுதப் பிரிவான, “போர்த் திட்டப் பிரிவின்’ மேற்பார்வையில் நடக்க உள்ளது. “குறைந்தபட்ச தடை பராமரிப்பு’ என்ற திட்டம், இந்தியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட அரசியல் கொள்கை என, பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.போர் திட்டப் பிரிவு, தேசிய கமாண்ட் ஆணையத்தின் (என்.சி.ஏ.,) கீழ் இயங்கி வருகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக பாகிஸ்தான் பிரதமர் உள்ளார். முப்படை தளபதிகள் இதன் உறுப்பினர்கள்.
சமீபத்தில் நடந்த என்.சி.ஏ., கூட்டத்தில், இந்த ஏவுகணைகள் தயாரிப்பு குறித்து போர் திட்டப் பிரிவு, முப்படை தளபதிகளுக்கு விளக்கம் அளித்துள்ளது.இந்த ஏவுகணைகள், அணு ஆயுதங்களை ஏந்திக் கொண்டு குறைந்தபட்சம் 700 கி.மீ., அதிகபட்சம் 1,000 கி.மீ., தூரம் வரை செல்லும் திறன் உடையவை. மேலும், இவை தரையில் இருந்து வானில் உள்ள இலக்கையும், வானில் இருந்து வானில் உள்ள இலக்கையும் தாக்கக் கூடிய தொழில்நுட்பம் கொண்டவை.இந்த தூர எல்லைக்குள், இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்தும் வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
“திட்டமிட்டபடி, இந்தாண்டின் இறுதிக்குள் 24 ஏவுகணைகளும் தயாரிக்கப்பட்டால், பாகிஸ்தான் இதுவரை ஓராண்டில் தயாரித்த ஏவுகணைகளில் இது தான் மிக அதிகமாக இருக்கும்’ என, பாகிஸ்தான் பத்திரிகை தெரிவித்துள்ளது.இத்தகவலை பாக்., அரசு மறுத்தாலும், அதிகாரிகள் சிலர் உறுதிப்படுத்தியுள்ளனர். அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உடனான இந்தியாவின் அணுசக்தி ஒப்பந்தங்களால், பாகிஸ்தான் கவலை அடைந்துள்ளது தான் இந்த திட்டத்துக்கு காரணம் என அவர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply