இந்த ஆண்டு தமிழகத்துக்கு ரூ.23 ஆயிரத்து 545 கோடி : மத்திய அரசிடம் இருந்து முதல்வர் வாங்கினார்

posted in: அரசியல் | 0

மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடாக இந்த நிதியாண்டில் தமிழகத்துக்கு, ரூ.23 ஆயிரத்து 535 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“நான் ஏற்கனவே எதிர்பார்த்தபடியே இந்த நிதி ஒதுக்கீடு இருப்பதால் எனக்கு திருப்திதான். இருந்தாலும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி தேவைப்படுவதால் தமிழகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கும்படி பிரதமரிடம், திட்டக்கமிஷன் எடுத்துக் கூறி அந்த நிதியை பெற்றுதரும் என்று நம்புகிறேன்’ என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

நடப்பு (2011-12) ஆண்டிற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து இறுதி செய்வதற்காக முதல்வர் ஜெயலலிதா நேற்று டில்லி வந்திருந்தார். மாலை 3.30 மணிக்கு திட்டக்கமிஷன் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்த முதல்வர், அங்கு திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியாவை சந்தித்துப் பேசினார். 15 நிமிடங்கள் இருவரும் தனியாக பேசிவிட்டு, பின்னர் பேச்சுவார்த்தை நடக்கும் அறைக்கு சென்றனர். அங்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசு மற்றும் திட்டக்கமிஷன் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். முக்கால் மணி நேர ஆலோசனைக்கு பிறகு முதல்வரும், அலுவாலியாவும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். தமிழகத்துக்கான திட்ட ஒதுக்கீட்டை அலுவாலியா முதலில் அறிவித்தார்.

தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து விரிவான விளக்கங்களை முதல்வர் எடுத்துக் கூறினார். அவரது, “2025 தொலைநோக்கு திட்டம்’ குறித்தும் விளக்கினார். நாங்கள் இப்போது 12வது ஐந்தாண்டு திட்டம் குறித்த ஆலோசனையில் உள்ளோம். 11வது ஐந்தாண்டு திட்டத்தின் கடைசி ஆண்டாக இது உள்ளது. இதில் 2011-12ம் நிதியாண்டிற்கான திட்ட ஒதுக்கீடு ரூ.23 ஆயிரத்து 535 கோடி என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு அலுவாலியா கூறினார்.

பின்னர் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: இந்த திட்டஒதுக்கீட்டைத்தான் எதிர்பார்த்தோம். இதில் எனக்கு திருப்திதான். ஆனாலும், தமிழகத்துக்கான திட்டங்கள் பல உள்ளன. அவை அனைத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து திட்டக்கமிஷன் மட்டுமே முடிவு செய்துவிடாது. தமிழகத்துக்கு சிறப்பு நிதிஒதுக்கீடு கேட்டிருந்தேன். மாநில அரசின் கடன் சுமை என்பது தற்போது ரூ. ஒரு லட்சத்து ஆயிரத்து 541 கோடி என இருக்கிறது. இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் கடனாக ரூ.45 ஆயிரம் கோடி உள்ளது. இந்த நிதிச்சுமையில் இருந்தெல்லாம் தமிழகத்தை மீட்டெடுக்க புனர்வாழ்வு நிதி அளிக்க வேண்டும். இதைப்பற்றியெல்லாம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா எடுத்துக் கூறுவார் என்று நம்புகிறேன். கடந்த முறை டில்லி வந்திருந்தபோது பிரதமரை சந்தித்து, தமிழக திட்டங்கள் குறித்தும், அதற்கான தேவைகள் குறித்தும் விரிவான கோரிக்கை மனுவை அளித்துள்ளேன்.

தமிழகத்தில் தற்போது மின்சார தட்டுப்பாடு மிகவும் அதிகமாக உள்ளது. அதற்கு ரூ.4,500 கோடி வரை அளிக்க வேண்டும். மாதந்தோறும் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பில் இருந்து, 2011 ஜூலை மாதத்திலிருந்து, 2012 மே வரை அளிக்க வேண்டுமென்று கேட்டிருந்தேன். மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் வழங்குவதற்கும் நிதியுதவி கேட்டிருந்தேன். ரூ.10 ஆயிரம் கோடி வரை சூரியஒளி மின்சார தயாரிப்பு திட்டத்திற்கும் கேட்டிருந்தேன். இந்த கோரிக்கைகள் பற்றிய பதில் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு துறைகளும் மோசமான நிலைமையிலேயே இருந்தன. விவசாயத்துறை மோசமாக இருந்தது. உற்பத்தி துறையும் மோசம். சேவைத்துறை மட்டுமே சற்று சரியாக இருந்தது. இதனால்தான், கடந்த 2010-11ம் ஆண்டில் 11.3 சதவீத வளர்ச்சி காணப்பட்டது. 2005-06ல் விவசாயத்துறை நெகட்டிவ் வளர்ச்சிக்கு போய்விட்டது. பிறகு ஓரளவுக்கு சரியானது. மின்சார பற்றாக்குறை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசாங்கத்திடம் இருந்து ஒரு அறிவுரை வந்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு இருக்காது என்று அந்த தகவல் கூறுகிறது. எனவே இதற்கும் தமிழகம் தயாராக வேண்டிய அவசியம் உள்ளது.

நாங்கள் கடந்த முறை ஆட்சியில் இருந்தபோதே, தமிழகத்தில் உள்ள நதிககளை இணைக்கும் திட்டம் குறித்து கோரிக்கை வைத்திருந்தோம். அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பம்பாறு, மணிமுத்தாறு, குண்டாறு ஆகிய நதிகளை இணைக்க வேண்டும் என்றும், அதற்கு ரூ.4,000 கோடி வரை அளிக்க வேண்டுமென்றும் கேட்டிருந்தோம்.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தும் நிலையில் காலதாமதமாகி வருகின்றன. பத்து இடங்களில் சூரிய ஒளி தயாரிக்கும் “பார்க்’குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மோனோ ரயில் திட்டத்திற்கு ரூ. 11 ஆயிரம் கோடி வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு உதவ வேண்டும். சென்னையில் மட்டும் இப்போது 27 சதவீத மக்கள், அரசு போக்குவரத்தை நம்பியுள்ளனர். மோனோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டால், 46 சதவீத மக்கள் பயன் அடைய வாய்ப்புள்ளது. இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *