எடியூரப்பா பதவியை இழக்கும் நேரம் வந்தது ; ஊழல் எதிர்ப்பு பா.ஜ., போருக்கு தடைக்கல்லானார்

posted in: அரசியல் | 0

புதுடில்லி: மத்தியில் ஆளும் காங்கிரசக்கு எதிராக ஊழல் புகாரினை முக்கிய ஆயுதமாக கையிலெடுத்து போராடி வரும் பா.ஜ., கட்சிக்கு எடியூரப்பா மீதான சர்ச்சை , கட்சிக்கு ஒரு தடைக்கல்லாக இருப்பதாக இக்கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

எனவே இவரை பதவியில் இருந்து வெளியேற சொல்லி விடலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. இது குறித்து விவாதிக்க பா.ஜ., பார்லி., குழு கூட்டம் இன்று காலையில் டில்லியில் பா.ஜ., தலைவர் நிதின்கட்காரி வீட்டில் துவங்கியது.

இரும்பு – சுரங்கத்தில் கோடிக்கணக்கில் இழப்பு : கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து தனது பதவியை தக்க வைக்க பலக்கட்ட சவால்களை சந்தித்து வருகிறாõர். எடியூரப்பா . கட்சிக்குள் அதிருப்பதி எம்.எல்.ஏ.,க்கள் எதிர்கட்சிகள் புகார், கவர்னருடன் மோதல், நம்பிக்கையில்லா தீர்மானம் என பல்வேறு பிரச்சனைகள் இருந்தது. இதற்கிடையில் இவர் மீதான இரும்பு மற்றும் சுரங்க ஒதுக்கீட்டில் இவரும் , இவரது குடும்பத்தினரும் பெரும் ஆதாயம் பெற்றதாக லோக்அயுக்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது. இந்த அறிக்கையில் சுரங்க ஒதுக்கீடு காரணமாக அரசுக்கு 16 ஆயிரத்து 805 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சுரங்க நிறுவனத்திடம் இருந்து எடியூரப்பா மகன்கள் நடத்தும் டிரஸ்டுக்கு ரூ. 10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர் என்றும், மேலும் சில அமைச்சர்களும் மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆகியோரும் ஆதாயம் அடைந்துள்ளனர். என்றும் லோக்அயுக்தா தலைவர் சந்தோஷ்ஹெக்டே கூறியுள்ளார்.

இதனையடுத்து எடியூரப்பாவை டில்லிக்கு வருமாறு அழைத்து விளக்கம் கேட்டது. அப்போது அவர் டில்லியில் நிருபர்களிடம் பேசுகையில்; என் மீதான குற்றத்திற்கு ஆதாரம் இல்லை , நான் பதவி விலக வேண்டும் என்ற கேள்வியும் எழவில்லை. நாளை ( வியாழக்கிழைமை ) எனது அமைச்சரவை மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கிறது அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். மீண்டும் 31 ம் தேதி டில்லிக்கு வருவேன் வந்து பா.ஜ., தலைவர்களிடம் விளக்குவேன் என்றார்.

பா.ஜ., உயர்மட்ட குழு அவசர கூட்டம்: இதற்கிடையில் நேற்று இரவு பா.ஜ., தலைவர்கள் நடத்திய பேச்சில் எடியூரப்பாவை பதவி விலக சொல்லி விடலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. இன்று காலை பா.ஜ., தலைவர் நிதின்கட்காரி வீட்டில் மூத்த தலைவர்கள் அத்வானி, அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், உள்ளிட்டோர் பங்கேற்கும் அவசர கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த வெங்கையா நாயுடு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார்.

எடியூரப்பா கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பார்களா ? : எடியூரப்பா இன்று மதியம் கூட்டியிருக்கும் முக்கிய கூட்டத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவரது கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்றும் பா.ஜ., உயர்மட்டக்குழு கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எடியூரப்பாவை பதவியில் இருந்து வெளியே போகச்சொல்லியும் அவர் அடம் பிடிப்பார் இதற்காகத்தான் அவர்எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். என்று கர்நாடக அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது. இதில் எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது என்று கூறுவார் என்றும் தெரிகிறது. பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பொறுத்தும் காட்சிகள் மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *