உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் செவ்வாய்கிழமை தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வியாழனன்று விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பாக, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின்படி, சமச்சீர் கல்வி திட்டத்தை ஆராய தலைமைச் செயலர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இக்குழு, சமச்சீர் கல்வி திட்டத்தை ஆய்வு செய்து, அதன் அறிக்கையை, சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 5ம் தேதி தாக்கல் செய்தது. இதன் மீது விசாரணை நடந்து முடிந்ததும், திங்கள் அன்று சென்னை ஐகோர்ட் முதல் பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது.
“ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை, நடப்பு கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 22ம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி
சட்ட திருத்தத்தை ரத்து செய்வதாகவும் அறிவித்தனர்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்காக, திங்கள் அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், துறை செயலர் சபீதா, தமிழக அரசு அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர், டில்லி புறப்பட்டுச் சென்றனர். உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், இதை எதிர்த்து அப்பீல் மனு தாக்கல் செய்தால், தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பது குறித்தும், செவ்வாய்கிழமை காலை முதல், மூத்த சட்ட நிபுணர்களுடன் அமைச்சரும், அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர்.
இறுதியில், அப்பீல் செய்வது என முடிவெடுக்கப்பட்டு, செவ்வாய்கிழமை மாலை சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை அவசர மனுவாக ஏற்று, விரைவாக விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்குமாறு, தமிழக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, அப்பீல் மனு மீது வியாழனன்று விசாரணை நடக்கும் என தெரிகிறது. இதற்கிடையே, இந்த வழக்கில் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட ஐந்து பேர், கேவியட் மனு தாக்கல் செய்தனர். தங்களின் கருத்துக்களை கேட்காமல், அப்பீல் மனு மீது தீர்ப்பு வழங்கக் கூடாது என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, விசாரணையின்போது, அவர்கள் தரப்பு கருத்துக்களும் கேட்கப்படும். இதற்கிடையே, உயர்நீதிமன்ற உத்தரவின்படி பாடப் புத்தகங்கள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டு உள்ளது. பாடப் புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அதனால், செவ்வாய்கிழமை பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அப்பீல் மனு மீது விரைவாக தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதால், சமச்சீர் கல்வி குறித்து முடிவு செய்ய இரண்டு நாள் வரை காத்திருக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Leave a Reply