சமச்சீர் கல்வி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க முடியாது: ஐகோர்ட் மறுப்பு

posted in: கோர்ட் | 0

சென்னை : சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு விசாரணையை, வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டுமென்ற அரசு தரப்பு கோரிக்கையை, ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் நிராகரித்தார்.

இதையடுத்து, இவ்வழக்கு இந்த வாரத்திற்குள் முடிவுக்கு வரும் என தெரிகிறது. சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில், இரண்டாம் கட்ட வாதம், ஐகோர்ட்டில் நேற்று நடந்தது. தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, “முதல் பெஞ்ச்’ முன், நடந்த வாதத்தில், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜரானார்.

அவரது வாதம் வருமாறு: தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில், மாநில பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்கள் மட்டுமே, பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன. தமிழகத்தில் மட்டும் மெட்ரிக், மாநில பாடத்திட்டம், ஆங்கிலோ- இந்தியன், ஓரியண்டல் பாட முறைகள் வழக்கத்தில் உள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் ஒரேவிதமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த ஆண்டு, ஒன்று மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், இரண்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலும், இக்கல்வி கொண்டு வரப்பட இருந்தது.

இந்நிலையில், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்து, தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு, ஐகோர்ட் தடை விதித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப் புத்தகங்களை ஆய்வு செய்ய, தமிழக அரசின் தலைமைச் செயலர் தலைமையில், கடந்த 17ம் தேதி, ஒன்பது பேர் கொண்ட குழுவை, தமிழக அரசு அமைத்தது.

இக்குழு, கடந்த மாதம் 17, 22, 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில், நான்கு முறையே கூடியுள்ளது. 15 மணிநேரம் மட்டுமே சமச்சீர் கல்வி குறித்து விவாதித்துள்ளது. ஒரு கோடியே 35 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்னையை, இவ்வளவு குறுகிய காலத்தில் விவாதித்து, அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்கள் சமச்சீர் கல்வி குறித்த ஆய்வறிக்கையை, முழுமையாக படிக்காமல் கையெழுத்திட்டுள்ளனர். ஆட்சி அதிகாரத்திலிருக்கும் கட்சிகள் மாறலாம்; அரசு ஒன்று தான். கடந்த ஆட்சியின் போது, சமச்சீர் கல்வியை ஏற்றுக் கொண்ட பள்ளிக் கல்வித் துறை செயலர், தற்போது அதை சட்டவிரோதம் என்கிறார். தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகளை, பள்ளி ஆசிரியர்களுக்கு, வார விடுமுறை நாட்களில் தான் நடத்த வேண்டும் என, கோர்ட் தீர்ப்பே உள்ளது. தற்போது, பள்ளி திறந்து 45 நாட்கள் ஆக உள்ள நிலையில், தங்களுக்கு என்ன பாடத்திட்டம் என தெரியாத நிலையில் மாணவர்கள் உள்ளனர். இவ்வாறு வழக்கறிஞர் பிரபாகரன் வாதிட்டார்.

இவ்வழக்கு விசாரணையை, வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் – ஜெனரல் நவநீவகிருஷ்ணன் கேட்டார். அவரது கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், “அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதம், நாளை(இன்று) காலை 10.30 மணிக்கு நடைபெறும். அப்போது அவர்கள், சமச்சீர் கல்வி ஆய்வுக் குழுவின் ஆய்வறிக்கை மற்றும் அது தொடர்பான வரைவறிக்கை மீது, இக்குழு உறுப்பினர்களின் கருத்துகளை சமர்ப்பிக்க வேண்டும். சமச்சீர் கல்வி ஆய்வு குழு நடத்திய கலந்தாய்வுக் கூட்டங்களின் நிகழ்ச்சி நிரலையும், ஒட்டப்பட்ட உறையில் தர வேண்டும்’ என, உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *