சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சமச்சீர் கல்வி குறித்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கில், சமச்சீர் கல்வியை ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜுலை 5ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கை மீது 7ம் தேதியும், 11ம் தேதியும் விவாதம் நடைபெற்றது. 12ம் தேதி நிபுணர் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களையும், அறிக்கையையும் தமிழக அரசு தாக்கல் செய்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் வாதம் வேகம் பிடித்தது.
தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணை நடைபெற்றது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ. நவநீதகிருஷ்ணனும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமாரும், சமச்சீர் கல்விக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் செல்வராஜ், புருஷோத்தமன், மோகன் ஆகியோர் வாதாடினார்கள்.
சமச்சீர் கல்விக்கு ஆதரவாக முன்னாள் அட்வகேட் ஜெனரல் விடுதலை ஆஜராகி வாதிடுகையில், உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பாக அரசு நியமித்த நிபுணர் குழுவில், சமச்சீர் கல்விக்கு எதிரான கருத்துடையவர்களே உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமச்சீர் கல்வியை செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை ஆராய்வதற்காகத்தான் நிபுணர் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த கடமையை நிபுணர் குழு செய்யவில்லை. ஒன்றாம் வகுப்புக்கும், 6ஆம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி இருப்பதை உச்ச நீதிமன்றம் அனுமதித்து இருக்கிறது. மொத்தமுள்ள ஒரு கோடியே 12 லட்சம் மாணவர்களில் மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் மட்டும் ஒரு கோடியே 7 லட்சம் பேர். மெட்ரிக் திட்டத்தில் 2 லட்சத்து 72 ஆயிரம் பேரும், ஆங்கிலோ-இந்தியன் பாடத்திட்டத்தில் 54 ஆயிரம் பேரும், ஓரியண்டல் திட்டத்தில் 10 ஆயிரம் பேரும் படிக்கிறார்கள். 93 சதவீத மாணவ-மாணவிகள் மாநில பாடத்திட்டத்தில்தான் படிக்கிறார்கள்.
மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் பெரும்பான்மையான மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டுதான் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், 93 சதவீத மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நிபுணர் குழுவில் மாநில பாடத்திட்டத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறவில்லை என்று விடுதலை வாதிட்டார்.
சமச்சீர் கல்விக்கு ஆதரவாக வழக்கறிஞர் மோகன் வாதாடும்போது, சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தும்போது மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் ஆகிய அனைத்து பாடத்திட்டங்களும் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றார்.
வழக்கறிஞர் புருசோத்தமன் வாதிடுகையில், “தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCRDE) மற்றும் தேசிய பாடத்திட்டம்-2005 (NCF) ஆகியவற்றின் ஆலோசனையையொட்டித்தான் தமிழக அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டுவந்தது. அதற்காக நியமிக்கப்பட்ட பேராசிரியர் முத்துக்குமரன் கமிட்டி, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை கூட்டம், பொதுவிவாதம் நடத்திய பின்னரே, சமச்சீர் கல்வி திட்டத்தை பரிந்துரை செய்தது” என்று குறிப்பிட்டார்.
தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதாடுகையில், சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பாக முந்தைய அரசு நியமித்த நிபுணர் குழுவில், பள்ளிக்கல்வி பற்றி தெரியாத கல்லூரி பேராசிரியர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அந்த நிபுணர் குழு 11.11.2010 அன்று ஒரேநாளில் கூடி, சமச்சீர் கல்வியையும், பாடப்புத்தகங்களையும் அனுமதித்தது. புதிய அரசு, கல்வியை மிக முக்கியமான விஷயமாகவும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்றும் கருதுகிறது. அதற்கேற்பத்தான் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, தரமில்லாத சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் முடிவு எடுத்தது. இதில் தவறு ஒன்றும் இல்லை.
சமச்சீர் கல்வியை கொண்டுவரக்கூடாது என்பது அரசின் நோக்கம் அல்ல. ஆனால், முந்தைய அரசு கொண்டுவந்துள்ள சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. சாதாரண மனிதர்களால்கூட இந்த குறைபாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. பாடப்புத்தகங்கள் தரமானதாக இல்லை. இதில் ஏராளமான மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது என்று நவநீத கிருஷ்ணன் கூறினார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் வாதாடுகையில், போதிய கால அவகாசம் வழங்காமல் சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி அமல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை ஆராயுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், பழைய பாடத்திட்டத்தைத்தான் பின்பற்றியாக வேண்டும். அப்படி இருக்கும்போது தற்போதைய சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.
சமச்சீர் கல்வியில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும். எனவே, இந்த ஆண்டு அதை அமல்படுத்த முடியாது. சமச்சீர் கல்வி பாடத்திட்டமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், பின்னர் அதை எப்படி அமல்படுத்த முடியும்? சமச்சீர் கல்வி பாடத்திட்டம், என்.சி.ஆர்.டி. தரத்திற்கு இல்லை. குழந்தைகளுக்கு உகந்ததாகவும் அது இல்லை. மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் அமைந்திருக்கவில்லை. அதில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும்.
வழக்கறிஞர் விஜயன் வாதிடுகையில், தற்போது முதல் வகுப்புக்கும் 6ஆம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது எஞ்சிய வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில் ஒன்றாம் வகுப்பிலும், 6ஆம் வகுப்பிலும் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பிலும் சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து சமச்சீர் கல்வி வழக்கில் விசாரணை இதோடு முடிவடைவதாகவும் தீர்ப்பு தள்ளிவைக்கப்படுவதாகவும் தலைமை நீதிபதி இக்பால் அறிவித்தார். வழக்கு தொடர்பான மனுக்களை வேண்டுமானால் சமர்ப்பிக்கலாம். ஆனால் விசாரணை கிடையாது என்றும் தலைமை நீதிபதி இக்பால் தெரிவித்தார்.
Leave a Reply