டோக்கியோ : ஜப்பான் நாட்டில், சுனாமிக்கு பின்னர், இயக்கப்படாமல் உள்ள அணு மின் நிலையங்களில், மக்களின் அச்சத்தைப் போக்க, பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஜப்பான் நாட்டில், கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமியால், புக்குஷிமாவின் நான்கு அணு மின் நிலையங்களிலிருந்து, கதிர்வீச்சு வெளிப்பட்டு, ஜப்பான் நாட்டை மட்டுமின்றி, அண்டை நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியது. புக்குஷிமா அணு உலை கதிர்வீச்சு ஏற்பட்ட இடத்திலிருந்து, 60 கி.மீ., தொலைவிலான மணலை சோதனையிட்டதில், அந்த மணலில் அணு கதிர்வீச்சு கலந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை வேறு இடத்தில் குடியமர்த்தும்படி, கதிர்வீச்சிலிருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்கான, புகுஷிமா நெட்வொர்க் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மணலில் குழந்தைகள் விளையாடுவதால், அவர்களுக்கு ஆபத்து நேரிடும் என்பதால், விரைவில் இவர்களை வேறு பகுதிகளில் குடியமர்த்த வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஜப்பான் நாடு, 30 சதவீத மின்சாரத்திற்கு, அணு மின் உற்பத்தி நிலையங்களை சார்ந்து உள்ளது. சுனாமிக்கு பின்னர், 54 அணு மின் நிலையங்களில், 19 மட்டும் தான் செயல்பாட்டில் உள்ளன. இதனால், அந்நாடு மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. மற்ற நிலையங்களை இயக்குவதற்கு, அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் அச்சம் தெரிவித்து வருவதால் இயக்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில், இயக்கப்படாமல் இருக்கும் அனைத்து அணு மின் நிலையங்களிலும் சோதனை நடத்த, ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறது, என்பதை மக்களுக்கு தெளிவாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து, அந்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்துறை அமைச்சர் பான்ரி கெய்டா கூறுகையில், “அணு மின் நிலையங்களின் பாதுகாப்பு நன்றாக உள்ளது. மக்களிடம் பயத்தைப் போக்க இந்த சோதனை விரைவில் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார்.
இம்மாதம், 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்படும் என்று, அந்நாட்டு பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
Leave a Reply