வாஷிங்டன் : “பாகிஸ்தான் நாட்டிற்கு ராணுவ நிதியுதவியில், ஒரு பகுதியை அமெரிக்கா நிறுத்தி இருப்பதை வரவேற்கிறோம்.
ஆசியா மண்டலத்தில் ஆயுதங்கள் குவிந்து, மண்டலத்தின் சமநிலை பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்காவின் நடவடிக்கையை இந்திய அரசு வரவேற்கிறது’ என, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று டில்லியில் கூறினார்.
பாகிஸ்தானில் பயங்கரவாதி ஒசாமா பில்லாடன் சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்து, பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லை. பாகிஸ்தானுக்கு அளித்து வரும் ராணுவ நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க எதிர்க்கட்சியினர் கூக்குரல் எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வந்த அமெரிக்க ராணுவ வீரர்களை அந்நாடு திருப்பி அனுப்பியது. அத்துடன் அமெரிக்கா அளித்த துப்பாக்கி, உடல் பாதுகாப்பு கவசம், இரவில் அணியும் கண்ணாடி போன்ற உதவிகளையும் ஏற்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. மேலும், பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் கருவிகளை இயக்கத் தேவையான அமெரிக்க வீரர்களுக்கு விசா வழங்கவும் மறுத்தது.
இதனால், பாகிஸ்தான் ராணுவத்திற்கு வழங்கி வந்த ராணுவ பாதுகாப்பு நிதியுதவியில் மூன்றில் ஒரு பங்கை, அதாவது, 3 ஆயிரத்து 680 கோடி ரூபாயை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு ஒவ்வொரு ஆண்டும், ராணுவ பாதுகாப்பு உதவியாக, அமெரிக்கா 9 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளித்து வருகிறது. பாகிஸ்தான், ஆப்கன் எல்லையில் பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட ஒரு லட்சம் ராணுவ வீரர்களை நிறுத்துவதற்கும், பயிற்சி அளிப்பதற்கும், ராணுவ தளவாடங்கள் வாங்கவும் இந்த நிதியுதவி பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில், மூன்றில் ஒரு பங்கை தற்போது நிறுத்தியுள்ளது.
அமெரிக்க நிர்வாகத்தின் இந்த முடிவை இந்திய அரசு வரவேற்றுள்ளது. இதுகுறித்து, நேற்று டில்லியில் பேட்டியளித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, “ஆசியா மண்டலத்தில் ஆயுதங்கள் குவிந்து, அமைதி குலைவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே, பாகிஸ்தானுக்கான நிதியுதவியை அமெரிக்கா குறைத்ததை இந்திய அரசு வரவேற்கிறது. இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலை கண்டிக்கிறேன். உலகளவில் பயங்கரவாதத்தை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது’ என்றார்.
Leave a Reply