புதுடில்லி : ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவகாரத்தில், ராஜ்யசபா எம்.பி., அமர் சிங்கிடம், டில்லி போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர்.
முன்னதாக இதற்கென சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ராஜ்யசபா எம்.பி.,யாக இருப்பதால் உள்துறை அமைச்சகம், சபாநாயகர் அலுவலகத்திடம் போலீசார் அனுமதி கோரி பெற்றனர்.
கடந்த 2008ல், பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க, பா.ஜ., எம்.பி.,க்களுக்கு பணம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. சமீபத்தில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை, மந்தமாக நடப்பதாக, சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான அமர் சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்சேனா கைது செய்யப்பட்டார். இவர் தான், பா.ஜ., எம்.பி.,க்களிடம், அமர் சிங் சார்பில் பணம் கொடுத்ததாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து, இந்துஸ்தானி என்பவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அமர் சிங்கும் இந்த விவகாரத்தில் சிக்குவார் என, எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப, ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக, அமர் சிங்கிடம், டில்லி போலீசார் இன்று காலை விசாரணை நடத்துகின்றனர். டில்லி குற்றப்பிரிவு போலீஸ் ஸடேஷனுக்கு வரவழக்கைப்பட்டு அங்கு விசாரணை துவங்கியது.
அமர் சிங்கைத் தவிர, சமாஜ்வாடி எம்.பி., ராமன் சிங், பா.ஜ., எம்.பி., அசோக் அர்கால், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி ஆகியோரிடமும் டில்லி போலீசார் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சஞ்சீவ் சக்சேனா, இந்துஸ்தானி ஆகியோரை, ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, டில்லி கோர்ட் நேற்று அனுமதி அளித்தது.
முலாயம்சிங்கின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், சமாஜ்வாடி கட்சியின் பொதுசெயலராகவும் இருந்து வந்த அமர்சிங் கட்சியில் இருந்து விலகி வேறு எந்த விஷயத்திலும் தலையிடாமல் இருந்து வந்துள்ள நிலையி்ல் இவர் தற்போது போலீஸ் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார்.
Leave a Reply