நான் தவறு ஏதும் செய்யவில்லை. எனக்கு முன்பிருந்த அமைச்சர்கள் கடைபிடித்த அதே கொள்கையைப் பின்பற்றித் தான் லைசென்ஸ்கள் வழங்கினேன்.
தவறு செய்ததாக என்னை குற்றம் சுமத்தினால், பிற அமைச்சர்களையும் சிறைக்குள் தள்ள வேண்டும். ஸ்வான், யுனிடெக் நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு, சிதம்பரம் தான் ஒப்புதல் அளித்தார். இது பிரதமருக்கும் தெரியும். இதை, பிரதமர் இல்லையென மறுக்கட்டும் பார்க்கலாம்’ என்று கோர்ட்டில், ராஜா சவால் விடுத்துப் பேசினார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு, பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்டோருக்கு குற்றப்பத்திரிகையின் நகல், கடந்த வாரம் தரப்பட்டு விட்டது. குற்றம் நடைபெற்றது குறித்த தகவல்களை தொகுப்பதற்கு முன், அவர்கள் தரப்பு கருத்துக்களையும் கேட்பதற்காக, குற்றம்சாட்டப்பட்டோருக்கு ஒரு வாய்ப்பை, கோர்ட் வழங்கும். அதன்படி நேற்று, முன்னாள் அமைச்சர் ராஜா, தன் வாதங்களை கோர்ட்டில் அடுக்கினார்.
அப்போது, ராஜா வழக்கறிஞர் சுஷில் குமார் கூறியதாவது:ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு, குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரம் வழங்கியது ஏன் என, சி.பி.ஐ., குற்றம்சாட்டுகிறது. 1,658 கோடி ரூபாய் வரை அளித்து, அவர்கள் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்றனர். லைசென்ஸ் பெற்றுவிட்டதாலேயே எல்லாம் முடிந்துவிடாது. அதன் பிறகு, சேவையைத் துவங்குவதற்கு பல கட்டங்கள் உள்ளன. அதற்கு பணம் தேவை. அந்த சமயத்தில், மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில், மிக முக்கிய முடிவும் எடுக்கப்பட்டது. அதுவரை, 49 சதவீதம் வரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று இருந்த வெளிநாட்டு முதலீட்டின் வரம்பை, 74 சதவீதமாக உயர்த்தியது. அரசாங்கத்தின் இந்த முடிவை பயன்படுத்தி, அந்நிறுவனங்கள் தங்களது பணத்தேவையை பூர்த்தி செய்ய முடிவெடுக்கின்றன.
அதன் விளைவாக பங்குகளை விற்கின்றன. இந்த பங்குகள் விற்பனை என்பது, முழுக்க முழுக்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடந்துள்ளது.இந்த யுனிடெக்,ஸ்வான் ஆகிய இரு நிறுவனங்களின் பங்குகளை விற்பது என முடிவெடுத்த போது, அதற்கான ஒப்புதலை அளித்தவர், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம். இந்த ஒப்புதலை அளித்த போது, பிரதமரும் இருந்தார். அவரும் இதை நன்றாக அறிவார். நான் கூறுவதை இப்போதும் கூட முடியுமானால், பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துப் பார்க்கட்டும்.சிறைக்கு அனுப்பவும்: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, ஜஸ்வந்த் சிங் தலைமையில் அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து முடிவெடுக்கப்பட்டது. “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏல முறை வேண்டாம் என்று, அந்த குழு தான் முடிவெடுத்தது. தவிர, டிராய் அமைப்பும் 28.8.07 அன்று எடுத்த முடிவின்படி, ஏலம் கூடாது என்றே தெளிவுபடுத்தப்பட்டது. இந்த முடிவுகளை பின்பற்றிய என்னை, குற்றவாளியாக்குகின்றனர்.
ஒரு அமைச்சராக நான் எடுத்த முடிவுகளில் தவறு ஏதும் இல்லை. விதிகளைத் தான் அமல்படுத்தினேனே தவிர, தவறு செய்யவில்லை. எனக்கு முன்பிருந்த அமைச்சர்களும், இதே முறையில் தான் லைசென்ஸ் வழங்கினர். அருண்÷ஷாரி 26 லைசென்ஸ்களை வழங்கினார். தயாநிதி 25 லைசென்ஸ்களை வழங்கினார். நான் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளேன். நான் தவறு செய்தேன் என்று சட்டமும், நீதியும் கூறுமானால், எனக்கு முன்பிருந்த அனைத்து அமைச்சர்களையும் சிறைக்கு அனுப்ப வேண்டும்.உண்மையில், நான் அமைச்சராக எடுத்த முடிவின்படி, தொலைபேசி கட்டணம் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது. சாதாரண ரிக்ஷா தொழிலாளி வரை மொபைல் போன்களை பரவலாக பயன்படுத்தும் நிலையை உருவாக்கினேன். தொலைத்தொடர்பு துறையில் இது ஒரு வகையான சாதனை.
மேலும், நான் மொத்தம் 9 நிறுவனங்களுக்கு லைசென்ஸ்கள் வழங்கினேன். ஆனால் ஸ்வான், யுனிடெக் என்ற இரண்டே இரண்டு நிறுவனங்கள் மட்டும் தான், திரும்பத் திரும்ப குறிவைத்து குற்றம்சாட்டப்படுகின்றன. பிற நிறுவனங்கள் குறித்து எதையும் பேச மறுக்கின்றனர். இவ்வாறு, பிற நிறுவனங்கள் குறித்து பேசாமல் தவிர்ப்பதன் பின்னணியில் மர்மம் இருப்பதாகவே சந்தேகிக்கிறேன்.மத்திய தணிக்கை ஆணையத்தின் அறிக்கை, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறுகிறது. சி.பி.ஐ., தனது குற்றப்பத்திரிகையில் 22 ஆயிரம் கோடி ரூபாய் வரை நஷ்டம் என்கிறது. அதே சி.பி.ஐ.,யின் வழக்கறிஞர் கோர்ட்டில் வாதாடும் போது, “7 ஆயிரத்து 100 கோடி ரூபாய் நஷ்டம்’ என்கிறார்.
எனக்குப் பிறகு பதவியேற்ற அமைச்சர் கபில் சிபலோ, “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நயா பைசா அளவுக்குக் கூட நஷ்டம் ஏற்படவில்லை’ என்கிறார். அதை விட, பிரதமர் மன்மோகன் சிங்கோ பலமுறை, “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நஷ்டம் ஏற்படவில்லை. அதில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுவது ஒரு கற்பனையான நஷ்டம்’ என்று பேட்டியளித்துள்ளார்.ஸ்பெக்ட்ரத்தின் உரிமையாளர் என்பவர் அரசாங்கம் தான். அந்த அரசாங்கமே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு இல்லை என்று கூறுகிறது. உரிமையாளருக்கு எந்த நஷ்டமும் இல்லை எனும் போது, நான் எப்படி தவறு செய்தேன் என்று குற்றம் சுமத்துகின்றனர் என்பது புரியவில்லை.இவ்வாறு ராஜா கூறினார்.
வியர்வையில் குளித்தசைனியின் கோர்ட்:பாட்டியாலா கோர்ட்டில், ராஜா சார்பில், மூத்த வழக்கறிஞர் சுசீல்குமார் ஆஜராகி வாதாடினார். அவர் மூன்று மணிநேரம் வாதாடினார். நேற்று, சைனி கோர்ட் அறையில் உள்ள “ஏசி’ பழுதாகி விட்டது. ராஜா தரப்பு வாதம் என்பதால் பத்திரிகையாளர்களும், வழக்கறிஞர்ளும் நூற்றுக்கணக்கில் குவிந்து விட்டனர். இதனால், அனைவரும் வியர்வையில் குளித்தனர். நேற்றைய வாதத்தின் போது, ராஜாவின் மனைவி மற்றும் கனிமொழி ஆகியோர் வந்திருந்தனர். மற்றபடி, அரசியல்வாதிகளோ, வழக்கமாக வரும் பிரமுகர்களோ வரவில்லை.
சி.பி.ஐ., மீது ராஜா புகார்:புதுடில்லி: “என்னிடம் விசாரணை நடத்தியது தொடர்பாக, கோர்ட்டுக்கு தவறான தகவல்களை அளித்ததன் மூலம், சி.பி.ஐ., நேர்மையற்ற முறையில் செயல்பட்டுள்ளது’ என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தரப்பில், கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு விசாரணையின் போது, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் ராஜா தரப்பில், மூத்த வழக்கறிஞர் சுஷில் குமார் ஆஜராகி வாதாடினர். அவர் கூறியதாவது:என் (ராஜா) விவகாரத்தில், சி.பி.ஐ., நேர்மையற்ற முறையில் செயல்படுகிறது. கடந்த 14ம் தேதி, கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, இரண்டு குற்றப்பத்திரிகைகள் தொடர்பான விவகாரத்தில், என்னிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது என, சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கடந்த 18ம் தேதி, லூப் டெலிகாம் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது குறித்து, என்னிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. என்னிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டதாக கூறிவிட்டு, மீண்டும் என்னிடம் விசாரணை நடத்தியது ஏன்?இதுபோன்ற தவறான தகவல்களை அளித்ததன் மூலம், சி.பி.ஐ., நேர்மையற்ற முறையில் நடந்து கொள்கிறது.இவ்வாறு ராஜாவின் வழக்கறிஞர் சுஷில் குமார் கூறினார்.
Leave a Reply