புதுடில்லி: “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க.,
எம்.பி., கனிமொழி, தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், நாளை (ஜூலை 21) துவங்கும்’ என, டில்லி சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது.
“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்து, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை முன்வைத்து, எதிர்க்கட்சிகள், பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டன. இதைத் தெடார்ந்து, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா, பதவியை ராஜினாமா செய்தார். இதன்பின், அவர் கைது செய்யப்பட்டார். ராஜாவின் தனிச் செயலராக இருந்த சந்தோலியா, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெகுரா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது, ஏமாற்றுதல், மோசடி, சதித்திட்டம், ஊழலில் ஈடுபட்டது ஆகியவை தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சி.பி.ஐ., தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில், ராஜா, சந்தோலியா, சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோரைத் தவிர, டி.பி.,ரியாலிட்டி நிறுவன இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக், யுனி ஒயர்லஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்த கவுதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபரா ஆகியோரது பெயரும் இடம் பெற்றது. இந்த வழக்கு தொடர்பான, இரண்டாவது குற்றப்பத்திரிகை, கடந்த ஏப்ரல் 25ல் தாக்கல் செய்யப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் ராஜாவுடன் சேர்ந்து, கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக தி.மு.க., எம்.பி., கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டது. கனிமொழியைத் தவிர, கலைஞர், “டிவி’ நிர்வாகி சரத் குமார், சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி, ஸ்வான் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஷாகித் உஸ்மான் பல்வா, அவரது உறவினர் ஆசிப் பல்வா, குசேகான் பி.லிட்., இயக்குனர் ராஜிவ் அகர்வால் ஆகியோரின் பெயரும், சேர்க்கப்பட்டது.
கனிமொழி மீது, ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சலுகை பெற்ற நிறுவனங்கள், கலைஞர், “டிவி’க்கு, கைமாறாக பணம் அளித்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழி, இந்த வழக்கில் சிக்கினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. சி.பி.ஐ.,யும், எதிர்தரப்பினரும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதை அடுத்து, நீதிபதி ஒ.பி.சைனி நேற்று கூறுகையில், “”வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்பணி முடிந்துள்ளதை அடுத்து, ராஜா, கனிமொழி மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், வரும் 21ம் தேதி(நாளை) முதல் துவங்கும்” என, உத்தரவிட்டார்.
Leave a Reply