சென்னை : தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுவதைக் கண்டித்து, தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பிற்பகல் விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னையில் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், கைதாகி விடுதலையானார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் நில மோசடியால் பாதிக்கப்பட்டவர்களிடம் புகார்களைப் பெற்று விசாரிக்க, நில மோசடி தடுப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில், புகார்கள் அதிகளவில் குவிகின்றன. இந்த புகார்களின்படி, தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அ.தி.மு.க., அரசு, அடக்குமுறை தர்பார், அராஜக நடவடிக்கைகள், பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குகள் போடுவதாக கூறி, அதைக் கண்டித்து தமிழகம் முழுவதும், தி.மு.க., மாநிலம் தழுவிய போராட்டம் அறிவித்தது. இதற்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை. ஆனால், நேற்று காலை மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகங்கள், எஸ்.பி., அலுவலகங்களின் முன் அனுமதியின்றி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில், நேற்று ஸ்டாலின் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடசென்னை இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில், ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது,””ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்று, பழிவாங்கும் நடவடிக்கையை மட்டும் தான் சரியாக செய்து வருகிறார். தேவையற்ற வழக்குகள், கைதுகள் என காவல் துறையை தன் விருப்பத்திற்கு பயன்படுத்தி வருகிறார். தி.மு.க., ஆட்சியின் போது அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கேட்ட போதெல்லாம் மறுக்காமல் கொடுக்கப்பட்டுள்ளது; இப்போது நமக்கு அனுமதி மறுக்கப்படுகிறது,” என்றார்.
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் , டி.கே.எஸ்.இளங்கோவன், டாக்டர் கனிமொழி, சேகர்பாபு, ஆர்.டி.சேகர், கவிஞர் காசிமுத்துமாணிக்கம், இந்திரகுமாரி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்து, ராயபுரம் வாணி மஹால் திருமண மண்டபத்தில் அடைத்து, சில மணி நேரங்களுக்குப் பின் விடுதலை செய்தனர்.
அதே போல், சைதாப்பேட்டையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேயர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மட்டும், 4,500க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டு, பிற்பகல் விடுதலை செய்யப்பட்டனர். தி.மு.க.,வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தால், நேற்று சென்னையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் அனுமதியை மீறி, ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.,வினர் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தி.மு.க., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதும் இரண்டு லட்சத்து 45 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், போலீஸ் தரப்பில் தமிழகம் முழுவதும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
Leave a Reply