நியூயார்க்:ஐ.நா., பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை நேற்று இந்தியா ஏற்றுக்கொண்டது. ஒரு மாத காலம் இந்த தலைமை பொறுப்பு இந்தியா வசமிருக்கும்.
அந்த ஒரு மாதத்தில் நிரந்தர உறுப்பினராவதற்கான வழிமுறைகள், லிபியா, சிரியா உள்ளிட்ட உலக நாடுகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு குறிப்பிடத்தக்க தீர்வு காண்பது ஆகியவற்றில் இந்தியா தீவிரம் காட்டும்.
ஐ.நா., பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பு, அதன் உறுப்பு நாடுகளுக்குள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஐ.நா.,வில் தற்காலிக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இந்தியா, ஒரே ஆண்டில் ஐ.நா.,வின் தலைமைப் பதவியை ஏற்றுள்ளது.இந்த ஒரு மாத கால பொறுப்பில், இந்தியாவை ஐ.நா.,வின் நிரந்தர உறுப்பினராக்கும் முயற்சிகள், லிபியாவில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவது மற்றும் ஐ.நா., அமைதிப் பணிக்காக இந்திய அமைதிப் படை வீரர்கள் காங்கோ சென்றபோது, பாலியல் புகாரில் சிக்கியது போன்ற பிரச்னைகளுக்கு, இந்திய தரப்பில் மிகுந்த கவனம் செலுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
ஐ.நா., சபைக்கான இந்திய உறுப்பினர் ஹர்தீப் புரி இதுகுறித்து ஐ.நா., வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:லிபியாவின் தற்போதைய நிலவரம் கவலை அளிக்கிறது. ரம்ஜான் மாதம் துவங்கியுள்ளதால், அந்நாட்டு மக்களின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு, போர் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும்.இந்திய ராணுவ வீரர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டை முறைப்படி விசாரித்து, இந்தியா மீதான நம்பகத்தன்மையை புதுப்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஐ.நா.,வின் நிரந்தர உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்படுவதற்கான வழிமுறைகள் பற்றியும் ஆராயப்படும்.
லிபியா மற்றும் சிரியா கிளர்ச்சி உட்பட சர்வதேச பிரச்னைகள் அனைத்திலும் ஐ.நா., சபையில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகளின் விருப்பத்தின்படி செயல்பட்டு, அவர்களின் கவனத்தை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த பேட்டியில் ஹர்தீப் புரி கூறியுள்ளார்.
ஐ.நா., அமைதிப் படையில் இந்திய ராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எனினும், தான் விரும்பியபடி, இந்திய படையினரின் நடவடிக்கைகளை நிர்ணயம் செய்ய முடியாத ஆதங்கம், இந்திய அரசுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கோவில் நடந்தது என்ன?ஆப்ரிக்க நாடான காங்கோவில், அமைதிப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஐ.நா., அமைதிப் படையினர் முகாமிட்டுள்ளனர். இதில், இந்திய ராணுவத்தின் ஜம்மு – காஷ்மீர் ரைபிள்ஸ் படையினரும் இடம்பெற்றிருந்தனர். கடந்த 2008ம் ஆண்டு உள்ளூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பணம் கொடுத்து, அவர்களுடன் இந்திய ராணுவ வீரர்கள் பாலியல் உறவில் ஈடுபட்டனர் என, புகார் எழுந்தது.ஐ.நா., சார்பில் குற்றம் சாட்டப்பட்ட இந்திய வீரர்கள் மற்றும் உள்ளூர் பெண்களிடம் டி.என்.ஏ., பரிசோதனை நடந்தது. அதில், இந்திய வீரர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, ஐ.நா.,வின் உத்தரவுப்படி, இந்தியப் படையினர் வாபஸ் பெறப்பட்டனர்.உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ராணுவ கோர்ட் மூலம் இவ்வழக்கை, இந்திய ராணுவம் விசாரித்து வருகிறது.
Leave a Reply