லண்டன் : சுவிட்சர்லாந்தின் யு.பி.எஸ்., வங்கி, 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை, வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த வங்கியோடு சேர்த்து, இந்தாண்டு மட்டும் ஐரோப்பாவில் உள்ள வங்கிகள், மொத்தம் 40 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் பல, கடன் சுமையில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில், அங்குள்ள வங்கிகள் தங்கள் செலவுகளைக் குறைத்து, வருவாயைப் பெருக்குவதற்கான உத்திகளைக் கையாண்டு வருகின்றன. கடந்த ஜூலை 28ம்தேதி, சுவிட்சர்லாந்தின் மிகப் பெரிய பன்னாட்டு நிதிக் குழுமமான “க்ரெடிட் சூசே’ இரண்டாயிரம் ஊழியர்களைக் குறைக்கப் போவதாக அறிவித்தது. இதையடுத்து, ஸ்காட்லாந்தின், ராயல் வங்கி இரண்டாயிரம் ஊழியர்களையும், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இயங்கி வரும் “பர்க்ளேஸ்’ நிதி நிறுவனம், மூவாயிரம் ஊழியர்களையும் குறைக்கப் போவதாக அறிவித்தன.
இதன் உச்சக்கட்டமாக எச்.எஸ்.பி.சி., வங்கி, இம்மாதம் 1ம் தேதி, 30 ஆயிரம் ஊழியர்களை, வீட்டுக்கு அனுப்பப் போவதாகத் தெரிவித்தது. இந்த வரிசையில், தற்போது சுவிட்சர்லாந்தின் மிகப் பெரிய நிதி மற்றும் வங்கிக் குழுமமான யு.பி.எஸ்., கடந்த வாரம் 3,500 ஊழியர்களைக் குறைக்கப் போவதாக அறிவித்தது. கடந்த ஜூன் மாத இறுதி வரை அந்நிறுவனத்தில் மொத்தம், 65 ஆயிரத்து, 707 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 5.3 சதவீத ஊழியர்களை யு.பி.எஸ்., வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
இதுபோன்ற சிக்கன நடவடிக்கைகளால், வரும் 2013ம் ஆண்டின் இறுதிக்குள், அந்நிறுவனம், 2.5 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் – 100 கோடி; ஒரு டாலர் – ரூ.45.) சேமிக்க திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய வங்கிகள் அடுத்தடுத்து தங்கள் ஊழியர்களைக் குறைத்து வரும் வேகம், அமெரிக்க வங்கிகளின் ஊழியர் குறைப்பை விட ஆறு மடங்கு அதிகம் என “ப்ளூம்பெர்க்’ செய்தி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
Leave a Reply