புதுடில்லி:எம்.பி.,க்களை தரக்குறைவாக பேசிய, பாலிவுட் நடிகர் ஓம்புரி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண் பேடி ஆகியோர் மீது, உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ், பார்லிமென்டின் இரு சபைகளிலும் நேற்று கொடுக்கப்பட்டது.
டில்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, பாலிவுட் நடிகர் ஓம்புரி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண் பேடி ஆகியோர், மேடையில் தோன்றி பேசினர். அப்போது, எம்.பி.,க்களையும், அரசியல்வாதிகளையும் அவமதிக்கும் வகையில், அவர்கள் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம், நேற்று பார்லிமென்டில் எதிரொலித்தது.
லோக்சபாவில் இதுகுறித்து, சபாநாயகர் மீரா குமார் கூறுகையில், “அரசியல்வாதிகளை தரக்குறைவான வார்த்தைகளில், அவமதிக்கும் வகையில் பேசியதாக ஓம்புரி, கிரண் பேடி ஆகியோர் மீது, உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவதாக, எம்.பி.,க்கள் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஜகதாம்பிகா பால், புனியா, ராமசங்கர் ராஜ்பார், லால்சந்த் கதாரியா, மிர்சா அஸ்லாம் பெக் உள்ளிட்டோர், நோட்டீஸ் அளித்துள்ளனர். இவை, என் பரிசீலனையில் உள்ளன’ என்றார்.
ராஜ்யசபாவில், இந்த விவகாரம் நேற்று புயலை கிளப்பியது. சமாஜ்வாடி கட்சி எம்.பி., ராம்கோபால் யாதவ், சுயேச்சை எம்.பி., முகமது அதீப் ஆகியோர், ஓம்புரி மற்றும் கிரண் பேடியை கடுமையாக விமர்சித்தனர். இது தொடர்பாக, உரிமை மீறல் நோட்டீசும் அளித்தனர்.ராம்கோபால் யாதவ் பேசுகையில், “உண்ணாவிரத மேடையில், ஓம்புரி பேசியது, அப்பட்டமான உரிமை மீறல் பிரச்னை. சபையில் இது பற்றி விவாதிக்க வேண்டும். பிரசாந்த் பூஷனும், பார்லிமென்டில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு லஞ்சம் பெறப்படுவதாகக் கூறியுள்ளார். படிப்பறிவற்றவர்கள் என, விமர்சித்துள்ளனர்.
இது, பார்லிமென்டின் பெருமையை சீர்குலைக்கும் செயல். தற்போதுள்ள எம்.பி.,க்களில் 80 சதவீதம் பேர், பட்டப்படிப்பு படித்தவர்கள். படிக்காதவர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. படித்தவர்களை விட, படிக்காதவர்கள் திறமையாகச் செயல்படுவர்.இவ்வாறு யாதவ் பேசினார்.இதைத் தொடர்ந்து பேசிய, ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான் கான், “உறுப்பினர்களின் உணர்வுகள், சபைத் தலைவரிடம் தெரிவிக்கப்படும்’ என்றார்.
மன்னிப்பு: இதற்கிடையே, அரசியல்வாதிகள் பற்றி கூறிய கருத்துக்களுக்காக, மன்னிப்பு கேட்பதாக நடிகர் ஓம்புரி கூறியுள்ளார். அவர் கூறியதாவது:என் 35 ஆண்டு கால சினிமா வாழ்வில், எந்த சர்ச்சையிலும் சிக்கியது இல்லை. ராம்லீலா மைதானத்தில் உணர்ச்சி வசப்பட்டு பேசியதால், இந்த சர்ச்சை நிகழ்ந்துவிட்டது. இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக வருந்துகிறேன். சரியான வார்த்தைகளை தேர்வு செய்து பேசியிருக்க வேண்டும். தெருவில் செல்லும் மனிதர்கள் போல் பேசி விட்டேன்.என் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்லிமென்ட் நடைமுறைகள் மீது, நம்பிக்கை வைத்துள்ளேன். உரிமை மீறல் தொடர்பாக, பார்லிமென்டுக்கு அழைக்கப்பட்டால், ஆஜராகி, விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்.இவ்வாறு ஓம்புரி கூறினார்.
கிரண் பேடி கூறுகையில், “பார்லிமென்டில், என் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. எனக்கு இதுவரை நோட்டீஸ் எதுவும் கிடைக்கவில்லை. நோட்டீஸ் கிடைக்கும் பட்சத்தில், அதுகுறித்து விளக்கம் அளிப்பேன்’ என்றார்.குற்றச்சாட்டு என்ன?டில்லி ராம்லீலா மைதானத்தில், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த 11வது நாளின்போது, பாலிவுட் நடிகர் ஓம்புரி, மைதானத்துக்கு வந்தார். ஹசாரேக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, மேடையில் பேசிய ஓம்புரி, அரசியல்வாதிகளை திறமையற்றவர்கள் என்றும், படிப்பறிவற்றவர்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
இதேபோல், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண் பேடி, உண்ணாவிரத மேடையில் தோன்றி, துணியால் தலையை மறைத்துக் கொண்டு, அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தார். “அரசியல்வாதிகள், இங்கே ஒரு மாதிரியும், வெளியே ஒரு மாதிரியும் பேசுகின்றனர்’ என, கிண்டலடித்தார்.இந்த விவகாரம் தான், தற்போது பார்லிமென்டில் புயலை கிளப்பியுள்ளது.
Leave a Reply