நாட்டிங்காம்: தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதாலும், முன்னணி வீரர்கள் காயமடைந்திருப்பதாலும் அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதுவே தோல்விகளுக்குக் காரணம் என்று இந்திய கேப்டன் டோணி கூறியுள்ளார்.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியை விட மோசமான தோல்வியை நாட்டிங்காமில் சந்தித்துள்ளது இந்திய அணி. ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமணைத் தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை.
இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ள இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் டோணி தானே பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார்.
போட்டிக்குப் பின்னர் அவர் பேசுகையில், இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். முன்னணி வீரர்கள் காயமடைந்திருப்பது அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தொடர்ந்து நமது வீரர்கள் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இதனால் சோர்வைச் சந்தித்துள்ளனர். இதுவும் தோல்விக்கு முக்கிய காரணம்.
வீரேந்திர ஷேவாக் இல்லாததும் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. அவர் இல்லாததால் நல்ல அடித்தளத்தை அமைக்க முடியாமல் போய் விட்டது.
வரும் போட்டிகளில் நாங்கள் எழுச்சி அடைந்து வெற்றிகளைப் பெற முயற்சிப்போம் என்றார் டோணி.
Leave a Reply