புதுடில்லி : “இயற்கை சீற்றங்கள் மற்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்குவதில், பிரதமருக்கும், மாநில முதல்வர்களுக்கும் சிறப்பு அதிகாரங்கள் உள்ளன.
அதன்படி அவர்கள் செயல்படலாம்; மாறுபட்ட நிவாரண உதவிகளை வழங்கலாம்’ என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் 2004 மற்றும் 2005ம் ஆண்டில் கற்பழிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து உதவிகள் அளிக்கப்பட்டன. இதை எதிர்த்து, எம்.எல்.ஏ., சன்யம் லோதா என்பவர் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் மனுவில் கூறியதாவது: கடந்த 2004 மற்றும் 2005ம் ஆண்டுகளில், ராஜஸ்தானில் 392 வழக்குகள் பதிவாயின. இதில், 377 பேருக்கு நிவாரண உதவி ஏதும் வழங்கப்படவில்லை. 13 பேருக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில் பெருத்த வித்தியாசம் உள்ளது. சிலருக்கு 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை மாறுபட்ட வகையில், நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் பத்திரிகைகளில் பெரிய செய்தியாக வந்த விவகாரங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் வரை நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு லோதா தன் மனுவில் கூறியிருந்தார்.
“கற்பழிப்பு சம்பவங்களுக்கு முதல்வர் நிவாரண நிதி செல்லாது’ எனக் கூறி ஐகோர்ட், மாநில அரசுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து ராஜஸ்தான் அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் ரவீந்திரன், பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. “நிவாரண நிதி கொடுப்பதற்கு வரையறை ஏதும் கிடையாது. அதே நேரத்தில் கொடுக்கப்படும் நிவாரண நிதி, நடந்த சம்பவங்களின் அடிப்படையில் நியாயப் பூர்வமானதாக இருக்க வேண்டும். நிவாரண நிதி வழங்குவதில் மாநில முதல்வருக்கும், பிரதமருக்கும் பிரத்யேக அதிகாரம் உள்ளது. அதன்படி அவர்கள் செயல்படலாம். அதில் யாரும் தலையிட முடியாது. எனவே, ஐகோர்ட்டின் தீர்ப்பை தள்ளுபடி செய்கிறோம்’ என, நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.
Leave a Reply