டெல்லி: அமெரிக்காவுக்கு அல் கொய்தா என்னும் ஒரு அச்சுறுத்தல் தான். ஆனால் இந்தியாவுக்கோ பல அச்சுறுத்தல்கள் உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
டெல்லியில் அனைத்திந்திய டைரக்டர்கள் ஜெனரல் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஜெனரல் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட ப. சிதம்பரம் பேசியதாவது,
டெல்லி மற்றும் மும்பை குண்டுவெடிப்புகள் நம் நாட்டு பாதுகாப்பு மற்றும் உளவுத் துறையின் பெயருக்கு ஏற்பட்ட கலங்கம். தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு புதிய யுக்தி தேவை. இரண்டு மாத காலத்தில் இரண்டு முறை தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளது நமக்கு அவமானம். இதற்காக மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு படைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
இந்த சம்பவங்களுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம், விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறோம். எந்த மாதிரி சூழ்நிலையில் இந்த தாக்குதல்கள் நடந்தன என்பதை எடுத்துக்கூறுவது நம் கடமை.
26/11 மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட 50 வகையான யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன. அயோத்தி தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகளை கொலை செய்ய திட்டமிட்ட சிமி அமைப்பின் சதி முறியடிக்கப்பட்டது.
அமெரி்க்கா உட்பட அனைத்து உலக நாடுகளும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க முடியவில்லை. இந்த ஆண்டு தொடங்கி கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 22 நாடுகளில் 279 தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தான் மோசமாக பாதிக்கப்பட்டன.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மையமாக உள்ளன. 5 முக்கிய தீவிரவாத அமைப்புகளில் 4 பாகிஸ்தானில் உள்ளன. அதில் 3 இந்தியாவைக் குறிவைக்கின்றது. ஜம்மு காஷ்மீர் மூலமாக இந்தியாவுக்குள் ஊடுருவுகின்றனர்.
நேபாலளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிகள் நடந்துள்ளன.
தீவிரவாத சவால் வல்லமைமிக்கதாக உள்ளது. அதை எதிர்க்க புதிய யுக்திகள் தேவைப்படுகிறது.
9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா அல் கொய்தா தான் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கண்டறிந்து அந்த அமைப்புக்கு எதிராக் போர் துவங்கியது. இதற்காக உள்நாட்டு பாதுகாப்பு துறையைத் துவங்கி அதன் கீழ் 22 ஏஜென்சிகளைக் கொண்டு வந்தது. இது 2 போர்கள் செய்துள்ளது. மேலும் பல நாடுகளுக்கு படைகளையும் அனுப்பியுள்ளது.
ஆனால் நமக்கு ஒரு அச்சுறுத்தல் மட்டும் இல்லை பல உள்ளன. அவற்றை எதிர்க்கும் திறனை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கானப் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கு நேரம், பணம், மனித வளம், தொழில்நுட்பம் ஆகியவை தேவைப்படுகின்றது என்றார்.
Leave a Reply