அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து வருவதால்இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை உயரும்

பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -சர்வதேச கரன்சிகளுக்கு நிகரான டாலர் மதிப்பு உயர்ந்து வருவதையடுத்து, நடப்பாண்டு இந்தியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 60 லட்சத்திற்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு 2011ம் ஆண்டு, ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாத காலத்தில், இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்து 38 லட்சத்து 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே காலத்தில் 34 லட்சத்து 60 ஆயிரம் என்ற அளவில் இருந்தது.இது, இந்திய சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. அமெரிக்கா, கிரீஸ் போன்ற நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இவ்வேளையிலும், அயல்நாட்டினர் இந்தியாவிற்கு சுற்றுலா வருவது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மூன்று மாதங்கள் சுற்றுலாவுக்கான உச்சகட்ட காலமாக கருதப்படுகிறது. எனவே, இக்காலத்தில் விருந்தோம்பல் துறையை சேர்ந்த நிறுவனங்கள், ஓட்டல் அறைகளின் வாடகையை 10 சதவீதம் உயர்த்துவது வழக்கம். மேலும், விமான நிறுவனங்களும்,முக்கிய சுற்றுலா தலங்களுக்கான விமான போக்குவரத்து கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தும். இதன்படி, தாஜ், ஒபராய், மரியாட் மற்றும் ஐ.டி.சி உள்ளிட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை நிர்வகித்து வரும் நிறுவனங்களும், அறை வாடகையை உயர்த்த திட்டமிட்டுள்ளன. இந்நிறுவனங்கள், கடந்தாண்டு சுற்றுலா காலத்தில் ஏற்பட்ட சரிவையும், நடப்பு காலண்டர் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் காணப்பட்ட தொய்வையும் சமாளிக்கும் விதத்தில், ஓட்டல் அறைகளின் வாடகையை 5-10 சதவீதம் வரை உயர்த்த உள்ளன.இது குறித்து மரியாட் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் துணைத் தலைவரான ராஜீவ் மேனன் கூறுகையில்,”வழக்கமாக, இம்மாதத்தில், ஓட்டல் அறைகளின் வாடகையை உயர்த்துவது குறித்து பேச்சு நடத்துவோம். இவ்வாண்டும் அது போல் நடைபெறும். எனினும் இது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அறை வாடகை 5-10 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தார். ஓட்டல் அறைகளின் பயன்பாடு, கடந்த ஆண்டை விட நடப்பாண்டு அதிகரித்துள்ளது. பிராந்திய அளவில் இது 85 சதவீத அளவிற்கும், முக்கிய பகுதிகளில் இது 95-100 சதவீத அளவிற்கும் உள்ளது. இதுவும், ஓட்டல் அறைகளின் வாடகையை உயர்த்த வழி வகுத்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, விமான நிறுவனங்களும், முக்கிய பகுதிகளுக்கான விமான கட்டணத்தை உயர்த்தியுள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், மும்பையில் இருந்து கோவாவிற்கு ஒரு வழி விமான போக்குவரத்து கட்டணமாக 12 ஆயிரத்து 300 ரூபாய் வசூலிக்கிறது. இது, வழக்கமாக வசூலிப்பதை விட இரு மடங்கு அதிகமாகும். இது தவிர, இந்நிறுவனம், டிசம்பர் மாதம் வரை மேற்கொள்ளும் ஒரு சில சுற்றுலா பகுதிகளுக்கான விமான போக்குவரத்து டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டல் அறை வாடகை உயர்வு, விமான கட்டணம் அதிகரிப்பு ஆகியவற்றால் சுற்றுலா துறைக்கு சிறிதும் பாதிப்பில்லை. கடந்த கோடையில் சுற்றுலா செலவு 5 -10 சதவீதம் அதிகரித்த போதிலும், இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை.உள்நாட்டில், கேரளா, அந்தமான் தீவு ஆகிய இடங்களுக்கு செல்ல, அயல்நாட்டினர் ஆர்வமாக உள்ளனர் என்கின்றனர் சுற்றுலா அமைப்பாளர்கள். டாலர் மதிப்பு உயர்வால், இந்தியாவிற்கு வரும் அயல் நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் அதே நேரத்தில், உள்நாட்டில் இருந்து அயல்நாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்காமல் உள்ளது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சிதான் இதற்கு காரணம் என்கின்றனர் இத்துறை வல்லுனர்கள். மேலும் அரசியல் குழப்பம், தீவிர வாதம் போன்ற பிரச்னைகளும், இந்தியர்களின் அயல்நாட்டு பயணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து டிலோட்டி இந்தியா நிறுவனத்தின் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா பிரிவு தலைவர் பி.ஆர். ஸ்ரீனிவாஸ் கூறும்போது,” தற்போதுள்ள டாலர் மதிப்பு, அயல்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சாதகமாக உள்ளது.விருந்தோம்பல் துறையை பொறுத்தவரை சென்னை, புனே ஆகிய நகரங்கள் அதிக ஓட்டல் அறைகளை கொண்டவையாக உள்ளன. அதே சமயம் மும்பை மற்றும் கோவாவில் கூடுதல் அறைகள் தேவைப்படுகின்றன’ என்று தெரிவித்தார்.அடுத்த மூன்று மாத காலத்தில், இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என, இத்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *