கொழும்பு: எது நடக்கக் கூடாது என்று அத்தனை பேரும் பயந்தார்களோ அது நடக்க ஆரம்பித்து விட்டது. இந்தியாவுக்கு எதிராக, இந்தியப் பெருங்கடல் பகுதியை சீனா பயன்படுத்த ஆரம்பித்து விட்டது.
மிக மிக தைரியமாக தனது உளவுக் கப்பலை இந்தியாவை வேவு பார்க்க அது அனுப்பி வைத்துள்ளது. அந்தக் கப்பல் தற்போது இலங்கையில் தஞ்சமடைந்துள்ளது. இதை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
சுண்டைக்காய் நாடான இலங்கையை விடுதலைப் புலிகள் வலுவாக இருந்தது வரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனால் இன்று எல்லாமே தலைகீழாக மாறிப் போய் விட்டது. இலங்கை முழுவதையும் சிங்களர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அத்தோடு சீனாவையும் தாராளமாக உள்ளே புழங்க அனுமதிக்க ஆரம்பித்துள்ளனர்.விடுதலைப் புலிகள் இருந்த வரை இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு எந்த வகையான பாதுகாப்பு மிரட்டலும் இல்லை. ஆனால் இன்று நமது எதிரிகளுக்கு விருந்து வைத்து இந்தியாவை சீண்ட ஆரம்பித்துள்ளது இலங்கை.
இலங்கையை மையமாக வைத்து இந்தியாவை வளைக்க ஆரம்பித்துள்ளது சீனா. ஏற்கனவே கச்சத்தீவில் சீன படையினரின் நடமாட்டம் இருப்பதாக நமது மீனவர்கள் கூறுகின்றனர். மேலும் சீனக் கடற்படையினர், இலங்கைக் கடற்படையினருடன் சேர்ந்து ரோந்தும் போவதாக கூறப்படுகிறது. இதெல்லாம் நமது கடற்படையினருக்குத் தெரியாதா அல்லது தெரிந்தும் கமுக்கமாக இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் இந்தியப் பெருங்கடலில் தனது உளவுக் கப்பல்களை அனுப்பி இந்தியாவை வேவு பார்க்க ஆரம்பித்துள்ளது இந்தியா. இந்தக் கப்பல்கள் புறப்படுவதும், திரும்ப சென்றடைவதும் இலங்கைக்குத்தான். இலங்கையின் ஆதரவுடன் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனவாம் சீனக் கப்பல்கள்.
அந்தமான் பகுதியில் இப்படித்தான் ஒரு சீனக் கப்பல் கிட்டத்தட்ட 20 நாட்களாக நின்றபடி வேவு பார்த்து வந்தது. இத்தனை நாட்களாக இந்தக் கப்பலை இந்தியக் கடற்படை பார்க்காமல் விட்டது பெரும் வியப்பான விஷயம்.
பின்னர்தான் சுதாரித்த இந்தியக் கடற்படையினர் அந்தக் கப்பல் குறித்து கவலைப்பட ஆரம்பித்தனர். அந்தக் கப்பலை மடக்கும் நோக்குடன் இந்தியக் கடற்படையினர் விரைந்தபோது அந்த சீனக் கப்பல் சர்வதேச எல்லைக்குள் நுழைந்து, கொழும்புக்கு ஓடி விட்டது.
சீனக் கப்பல் எங்கு என்ன செய்து கொண்டிருந்தது என்பது தெரியவில்லை. ஆனால் நமது எல்லைக்குள் அத்துமீறி வந்த கப்பலை சுட்டு வீழ்த்தாமல் துரத்தி விளையாடி வெறும் கையுடன் திரும்பியுள்ளது இந்தியக் கடற்படை.
இந்தக் கப்பல் இந்தியரப் பெருங்கடலின் தட்பவெப்பம் தொடர்பான ஆய்வுகளைச் செய்திருக்கலாம் என கடற்படை அதிகாரிகள் இவர்களாகவே ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துச்சொல்லியுள்ளனர்.
ஆனால் இந்தியாவின் ஏவுகணைச் சோதனைகள் குறித்து சீனக் கப்பல் உளவு பார்த்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கை நமது நட்பு நாடு, சீனாவுக்கு அது ஆதரவு தராது என்று வாய் கிழியப் பேசி வருகிறார்கள் பிரதமர் முதல் மத்திய அரசு உயர் அதிகாரிகள் வரை – காங்கிரஸார் உள்பட. ஆனால் சீனக் கப்பலுக்கு இலங்கைதான் முழு ஆதரவாக உள்ளது என்று தெரிந்த பின்னரும் கூட இலங்கையைக் கண்டிக்கவோ அல்லது சீனாவைக் கண்டிக்கவோ இதுவரை யாரும் முயற்சி கூட செய்யாமல் இருப்பது ஆச்சரியம்தான்.
ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ரயில் விடும் சீனா!
இதேபோல இந்தியாவுக்கு எதிரான இன்னொரு செயலிலும் சீனா இறங்கியுள்ளது. அது பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்புக் காஷ்மீருக்கு ரயில் விடுவது.
சீனாவின் வட மேற்கு ஜின்ஜியாங் மாகாணத்திலிரு்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரை ரயில் போக்குவரத்தை நடத்த பாகிஸ்தான் அரசுடன், சீனா ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுதொடர்பான ஆய்வுகள் தொடங்கியுள்ளன. கிட்டத்தட்ட 5000 மைல் தூரத்திற்கு இந்த ரயில்வே பாதை அமைக்கப்படவுள்ளது.
Leave a Reply