சென்னை:””நான் எந்த புதிய சொத்தும் வாங்கவில்லை, எனக்கு, 51 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளன,” என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், இந்திய குடியரசு கட்சி உறுப்பினர் செ.கு.தமிழரசன் பேசும்போது, “வஞ்சகம், போலி நிறைந்த அரசியல் உலகில் நம்பகத்தன்மைக்கு இலக்கணமாக முதல்வர் ஜெயலலிதா விளங்குகிறார். மனசாட்சியை தவிர வேறு எதற்கும் அவர் அஞ்சமாட்டார். அவர் சொத்துக்கணக்கு வெளியிடவில்லை என, ஒரு ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முதல்வர் விளக்கம் தருவாரா?’ என, கேட்டார்.
இதற்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில்:பெரிய ரகசியத்தை கண்டுபிடித்தது போல, அந்த ஆங்கிலப் பத்திரிகை அப்படி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. என் சொத்து விவரத்தில் எந்த ரகசியமும் இல்லை; ஒளிவுமறைவும் இல்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரு விதியின் படி, சட்டசபை, லோக்சபா, ராஜ்யசபா பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போது, தங்களது சொத்துக்களின் விவரங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும்.அந்த அடிப்படையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில் நான் போட்டியிட்டேன். அப்போது என் சொத்துக்களின் பட்டியலை வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ளேன். என் சொத்து விவரத்தை அப்போதே பத்திரிகைகள் வெளியிட்டு விட்டன.
ஸ்ரீரங்கம் தொகுதியில் நான் போட்டியிட்ட போது, அசையும் சொத்து, 13 கோடியே, 3 லட்சத்து, 27 ஆயிரத்து, 979 ரூபாய். அசையா சொத்து, 38 கோடியே, 37 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய். ஆக மொத்தம், 51 கோடியே, 40 லட்சத்து, 67 ஆயிரத்து, 979 ரூபாய்.சட்டசபை தேர்தல் முடிந்து மூன்று மாதம் தான் ஆகியுள்ளது. இந்த மூன்று மாதத்தில் நான் எந்த புதிய சொத்தும் வாங்கவில்லை. ஏற்கனவே சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளேன். எனவே, மீண்டும் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
Leave a Reply