சென்னை:ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைக்களுக்கான ஊக்கத் தொகை ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில் விதி எண் 110ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: இளைஞர்கள் ஒரு நாட்டின் மதிப்பு மிக்க செல்வம். 10 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள 25 மாணவர்கள் மற்றும் 25 மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விளையாட்டில் உயர்தர நுணுக்கங்களுடன் கூடிய, விஞ்ஞான ரீதியான பயிற்சி அளிக்க, சென்னையில் உலகத் தரம் வாய்ந்த முதன்மை நிலை விளையாட்டு மையம் அமைக்கப்படும்.தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியர் இந்த மையத்தில் தங்கி சிறப்பு பயிற்சி பெறுவர். இந்த மையத்தில் தங்கும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டுச் சீருடை, விளையாட்டு உபகரணங்கள், நவீன உடற்பயிற்சிக் கூடம், விஞ்ஞான ரீதியிலான பயிற்சி, வெளிநாடுகளில் போட்டிகளில் கலந்து கொள்ள உதவி மற்றும் பயிற்சி ஆகிய வசதிகள் செய்து தரப்படும்.
சென்னையில் உள்ள சிறந்த பள்ளிகளில் கல்வி பயிலவும், இந்த மாணவ, மாணவியருக்கு அரசால் உதவி செய்யப்படும். இந்த மையம் அமைப்பதற்காக, அரசுக்கு ஒரு கோடி ரூபாய் தொடரா செலவினமும், ஆண்டு ஒன்றுக்கு 70 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தொடர் செலவினமும் ஏற்படும்.ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில், பதக்கம் பெற வாய்ப்புள்ள திறன் வாய்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளைத் தயார் செய்வதற்கான ஒரு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி ஐந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவர்களை சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆண்டு ஒன்றுக்கு, ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைக்களுக்கான ஊக்கத் தொகை ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடியாகவும். வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடியாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத்தொகை 20 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சமாகவும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சமாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
விளையாட்டு விடுதி மற்றும் பள்ளிகளில் சேர்க்கப்படும் வீரர்கள், வீராங்கனைகளின் எண்ணிக்கை 860 லிருந்து 1,100 ஆக உயர்த்தப்படும். இதற்காக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் தொடரா செலவினமும், ஒரு கோடியே 16 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் தொடர் செலவினமும் ஏற்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு விளையாட்டு விடுதி வீதம் 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.ஒவ்வொரு விளையாட்டு விடுதியிலும் 60 மாணவ, மாணவியருக்கு உயர்தர பயிற்சி அளிக்கப்படும். முதல் கட்டமாக ஐந்து மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Leave a Reply