காலை டிபனுக்காக ஹெலிகாப்டரில் பறந்த ஜனா : கைதிகளோடு வரிசையில் நின்று சாப்பிடுகிறார்

posted in: அரசியல் | 0

ஐதராபாத்: ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, சிறையில் வரிசையில் நின்று சாப்பாடு பெற்று, சாப்பிட்ட பின் தட்டை கழுவி வைக்கிறார் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்கத்தொழில் அதிபருமான ஜனார்த்தன ரெட்டி, முறைகேடாக சுரங்க தொழில் நடத்தியதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இவர் வீட்டில் சோதனை நடத்தி, 30 கிலோ தங்கமும், பல கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர ஐகோர்ட் உத்தரவை அடுத்து, சி.பி.ஐ., இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தற்போது, ஐதராபாத்தில் உள்ள சஞ்சலகுடா சிறையில் ஜனார்த்தன ரெட்டி அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் இவரது மைத்துனர் சீனிவாச ரெட்டியும் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். காலையில் டிபன் சாப்பிடுவதற்காக பெல்லாரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு வந்து செல்லும் வழக்கம் உடைய ஜனார்த்தன ரெட்டி, தற்போது, சிறையில் கொடுக்கப்படும் அளவு சாப்பாட்டை வரிசையில் சக கைதிகளுடன் நின்று வாங்கி செல்கிறார். சாப்பிட்டு முடிந்ததும் அந்த தட்டை கழுவி வைக்கிறார் என, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறை அதிகாரி இது குறித்து குறிப்பிடுகையில், “சிறையில் சிறப்பு அந்தஸ்து கேட்டு ஜனார்த்தன ரெட்டி சார்பில் அவரது வழக்கறிஞர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை. தினமும், 600 கிராம் சாதமும், 100 கிராம் பருப்பும், கால்கிலோ காய்கறியும் உணவாக அளிக்கப்படும். நேற்று முன்தினம் அவர் வெறும் தரையில் தான் படுத்து தூங்கினார். அவரது துணியை அவரே தான் துவைக்க வேண்டும். அவர் தங்கும் இடத்தை அவரே தான் பெருக்கி தூய்மை செய்ய வேண்டும். வரும் 19ம் தேதி வரை அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது’ என்றார். தற்போது ஜனார்த்தன ரெட்டியுள்ள சஞ்சலகுடா சிறையில் தான், சத்யம் மோசடியில் கைதான ராமலிங்கராஜு அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு, கோர்ட் அனுமதியுடன் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *