லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோணிக்கு ஐசிசியின் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது கிடைத்துள்ளது.
நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதைப் பெறத் தவறினார்.
ஐசிசி விருதுகள் விழா லண்டனில் நேற்று நடந்தது. இதில் பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கேப்டன் டோணிக்கு ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது கிடைத்தது. 2வது டெஸ்ட் போட்டியின் போது அவுட் ஆன இயான் பெல்லை மீண்டும் பேட்ட அனுமதித்ததற்காக இந்த விருது கொடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு 2010ம் ஆண்டின் சிறந்த வீரராக தேர்வான சச்சின் இந்த முறை விருதைத் தவற விட்டார். இங்கிலாந்தின் ஜோனாதன் டிராட்டுக்கு அந்த விருது கிடைத்தது.
அதேபோல சிறந்த ஒரு நாள் போட்டிக்கான விருதை கெளதம் கம்பீர் தவற விட்டார். இலங்கையின் குமார சங்கக்கராவுக்கு விருது கிடைத்தது.
இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஐசிசி விருது பெற்ற ஒரே வீரர் டோணி மட்டுமே.
ஐசிசி லெவன் அணியில் சச்சினுக்கு மட்டும் இடம்
இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டின் சிறந்த ஐசிசி டெஸ்ட் அணியை ஐசிசி அறிவித்தது. அதில் இந்தியாவின் சார்பில் சச்சின் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
அதேபோல ஜாகீர்கான் 12வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்திலிருந்துதான் நிறையப் பேர் இடம் பெற்றுள்ளனர். அலிஸ்டைர் குக், ஜோனாதன் டிராட், ஸ்டூவர்ட் பிராட், கிரீம் ஸ்வான், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் அணி விவரம் – குமார் சங்கக்கரா, அலிஸ்டைர் குக், ஹஷீம் அம்லா, ஜோனாதன் டிராட், சச்சின் டெண்டுல்கர், ஏப் டிவில்லியர்ஸ், ஜேக்கஸ் கல்லிஸ், ஸ்டூவர்ட் பிராட், கிரீம் ஸ்வான், டேஸ் ஸ்டெயின், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாகீர் கான் (12வது ஆட்டக்காரர்).
Leave a Reply