தனியார் பொறியியல் கல்லூரிகளில், தற்போதுள்ள காலி இடங்களை நிரப்புவது குறித்து, தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதன்படி, இந்தாண்டு கவுன்சிலிங் முடிந்த பின் காலியாக உள்ள இடங்களை, அடுத்தாண்டில், இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, உயர் கல்வித் துறை செயலர் கண்ணன் வெளியிட்ட உத்தரவு: அடுத்தாண்டு முதல், கவுன்சிலிங் நடக்கும் போது, கூடுதல் இடங்களுக்கு தனியார் பொறியியல் கல்லூரிகள் அனுமதி பெற்று வந்தால், அந்த கூடுதல் இடங்கள், கவுன்சிலிங்கில் சேர்த்து கொள்ளப்படாது.
முதலாமாண்டுக்கு அதிகரிக்கப்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப, கல்லூரி நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கப்படாது. ஆனால், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு நிரப்பப்படாமல் இருக்கும் அரசு கூடுதல் இடங்களை, இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்தாண்டு முதல், கவுன்சிலிங் துவங்கும் முன், கூடுதல் இடங்களுக்கு அனுமதி அளித்து விட வேண்டும், கவுன்சிலிங் நடக்கும் போது கூடுதல் இடங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் தமிழக அரசு கேட்டுக் கொள்ளும்.
இது குறித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு, தமிழக தொழில்நுட்பக் கல்வி ஆணையர் கடிதம் எழுதுவார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply