புதுடில்லி : நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதி 3,235 கோடி டாலராக உயரும் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா பார்லிமென்டில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: சென்ற 2010-11ம் நிதியாண்டில் ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதி 2,680 கோடி டாலராக இருந்தது. நடப்பு 11வது ஐந்தாண்டு(2007-12) திட்டத்தின் இறுதியாண்டில், உள்நாட்டிற்குள் மேற்கொள்ளப்படும் ஜவுளி வர்த்தகம் 6,500 கோடி டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், ஜவுளி மற்றும் ஆடைகளின் பங்களிப்பு, சென்ற 2008-09ம் நிதியாண்டில் 11.46 சதவீதமாக இருந்தது. இது, 2010-11ம் நிதியாண்டில் 10.63 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும், சர்வதேச அளவில், நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
சர்வதேச ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு, கடந்த 2007ம் ஆண்டில், 3.36 சதவீதமாக இருந்தது. இது, 2009ம் ஆண்டில் 3.91 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜவுளித் துறையை பொறுத்தவரை, நாட்டின் நூற்பாலைகளில் உள்ள கதிர்களின் எண்ணிக்கை, நடப்பு 11வது திட்ட காலத்தில், சென்ற மார்ச் இறுதி நிலவரப்படி, 90 லட்சம் அதிகரித்து 4 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
பருத்தி நூலிழை உற்பத்தி சென்ற 2007-08ம் நிதியாண்டில் 294கோடியே 80 லட்சம் கிலோவாக இருந்தது. இது, சென்ற 2010-11ம் நிதியாண்டில், 351 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இதே ஆண்டுகளில், ஜவுளி உற்பத்தியும் 5,525 கோடியே 70 லட்சம் சதுர மீட்டர் என்ற அளவில் இருந்து, 6,105 கோடியே 70 லட்சம் சதுர மீட்டராக உயர்ந்துள்ளது.
Leave a Reply