கோல்கட்டா : “மேற்குவங்கத்தில் டாடா கார் தொழிற்சாலைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, மாநில அரசு மீண்டும் கையகப்படுத்தியது செல்லும்’ என, கோல்கட்டா ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
மேற்குவங்கத்தில் இடதுசாரி கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, டாடா நிறுவனம் கார் தொழிற்சாலை அமைப்பதற்காக, சிங்கூரில், 997 ஏக்கர் நிலம், கடந்த 2006ல் கையகப்படுத்தப்பட்டது.
இதை எதிர்த்து, விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆதரவளித்தார். போராட்டம் தீவிரமடைந்ததால், டாடா நிறுவனம் நானோ கார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை, குஜராத்துக்கு மாற்றியது.
இதையடுத்து, மம்தா பானர்ஜி முதல்வராக பதவி ஏற்றதும், இந்த நிலத்தை டாடா நிறுவனத்திடமிருந்து கையகப்படுத்துவதற்கான சட்டத்தை கொண்டு வந்தார். இதை எதிர்த்து டாடா நிறுவனம், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி ஐ.பி.முகர்ஜி விசாரித்தார். “சிங்கூர் நிலத்தை டாடா நிறுவனத்திடமிருந்து கையகப்படுத்தும் மாநில அரசின் நடவடிக்கை செல்லும்’ என, நேற்று தீர்ப்பளித்தார்.
“இந்த நடவடிக்கை தொடர்பாக டாடா நிறுவனம், மாநில அரசிடம் இழப்பீடு கோரலாம். இந்த தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக, இந்த உத்தரவு, நவம்பர் மாதம் 2ம் தேதிக்கு மேல் தான் அமலுக்கு வரும்’ எனவும், நீதிபதி உத்தரவிட்டார்.
டாடா நிறுவனத்திடமிருந்து நிலங்களை சுமுகமாக திரும்பப் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஹூக்ளி மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஆகியோரை கொண்ட குழுவையும் ஐகோர்ட் நியமித்துள்ளது.
ஐகோர்ட்டின் தீர்ப்பை கேட்ட சிங்கூர் பகுதி விவசாயிகள், வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசியும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மம்தா பானர்ஜி, மேற்குவங்க முதல்வர் : சிங்கூர் நில விவகாரத்தில் ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தீர்ப்பு, நாட்டின் மற்ற பகுதிக்கும், சொல்லப்போனால் உலகுக்கே கூட வழிகாட்டியாக அமையும். தீர்ப்பை அளித்த ஐகோர்ட்டுக்கு எனது நன்றி. ஐகோர்ட் தீர்ப்புப்படி நவம்பர் 2ம் தேதிக்கு பிறகு, நிலத்தை மீட்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Leave a Reply