தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தேசிய கல்வி மையம்

posted in: கல்வி | 0

நாடு முழுவதும் பெருமைக்குரிய கல்வியை அளித்து வரும் ஐ.ஐ.டி.,க்களின் பட்டியலில், காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள ஐ.ஐ.ஐ.டி.யும் இணைந்துள்ளது.

இந்த மையத்தில் படித்த அனைவரும் வேலைவாய்ப்பு பெற்று, சிறந்த பணிகளில் இடம் பிடித்துள்ளனர். மத்திய அரசின் நிதியுதவியுடன், சென்னை உட்பட எட்டு இடங்களில் ஐ.ஐ.டி.க்கள் உள்ளன. தரமான உயர்கல்வி வழங்குவதில் முதன்மை நிறுவனங்களாக, இவை இயங்கி வருகின்றன.

அதுபோல், ஏழு ஐ.ஐ.எம்., கல்வி மையங்கள் மற்றும் திருச்சி உள்ளிட்ட 30 என்.ஐ.டி., கல்வி மையங்களும் இயங்கி வருகின்றன. இந்த கல்வி மையங்களில் படிப்பதையே பெருமையாக கருதும் நிலை மாணவர்கள் மத்தியில் உள்ளது.

இந்த வரிசையில், சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட, இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் அண்டு மேனுபேக்சரிங் (ஐ.ஐ.ஐ.டி., டி அண்டு எம்) கல்வி மையங்களும் இணைந்துள்ளன. நாடு முழுவதும் நான்கு மையங்களும், தனியாருடன் இணைந்து இரண்டு மையங்களும் துவக்கப்பட்டன. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவக்கப்பட்ட ஐ.ஐ.ஐ.டி.,யும் ஒன்று. சென்னை அருகே வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையிலுள்ள மேலக்கோட்டையூரில், 51 ஏக்கர் பரப்பளவில், 70 கோடி ரூபாய் செலவில், இம்மையம் அமைந்துள்ளது.

அதிகம் பிரபலமாகாத இக்கல்வி மையத்தில், பி.டெக்., எம்.டிசைன், பிஎச்.டி., படிப்புகள் உள்ளன. பி.டெக்., படிப்பில் 90 மாணவர்களும், எம்.டிசைனில் 40 மாணவர்களும், பிஎச்.டி., படிப்பில் 40 மாணவர்களும் சேர, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இங்கு படித்த முதல், பேட்ச் மாணவர்கள் 30 பேர், சமீபத்தில் பட்டம் பெற்றனர். இவர்களில் பலருக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், பணி கிடைத்துள்ளது. சிலர் மேல் படிப்பில் சேர்ந்துள்ளனர். தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள இந்த மையத்தில், இந்த ஆண்டு 82 மாணவர்களும், எம்.டிசைன் படிப்பில் 16 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். அகில இந்திய நுழைவுத் தேர்வான ஏ.ஐ.இ.இ.இ., மற்றும் கேட் நுழைவுத் தேர்வுகளின் மூலம், இங்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இதன் இயக்குனர் ஞானமூர்த்தி கூறும்போது, “தற்போது இங்கு படிக்கும் மாணவர்களுக்கு தேவையான லேப், விடுதி, வகுப்பறை வசதிகள் உள்ளன. இன்னும் வசதிகளை உருவாக்கி வருகிறோம். இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் ஐ.ஐ.ஐ.டி., முழு வசதிகளுடன் இருக்கும். வசதிகளை அதிகப்படுத்தியதும், மாணவர் சேர்க்கை இடங்களையும் அதிகப்படுத்துவோம்” என்றார்.

இதுபோல, மேலும் 20 ஐ.ஐ.ஐ.டி.,க்களை உருவாக்க யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு முயற்சி எடுத்து, இது போன்ற கல்வி மையங்களை தமிழகத்திற்கு வரவழைக்க, முயற்சி எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை, மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. திருச்சியில் ஐ.ஐ.எம்., அமைக்கும் முயற்சியையும், தமிழக அரசு துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *