துண்டு துண்டாய் பூமியில் விழப் போகும் நாசா செயற்கைக்கோள்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சூரியன் மற்றும் பூமியின் வளிமண்டலத்தை குறித்த தகவல்களை திரட்ட நாசா செலுத்திய செயற்கைக்கோள் இன்னும் ஒரு சில மாதங்களில் துண்டு, துண்டாக பூமியை வந்தடையவிருக்கிறது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1991ம் ஆண்டு உயர் வளிமண்டல ஆராயச்சி செயற்கை கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.) விண்ணில் செலுத்தியது.

கடந்த 2005-ம் ஆண்டு அந்த செயற்கைக்கோள் செயல் இழந்தது. இதையடுத்து அது பூமியின் வளி மண்டலத்தில் நுழையவுள்ளது. அந்த செயற்கைக்கோள் பூமியை வந்தடையும்போது துண்டு, துண்டுகளாக வந்து விழும். அதில் பெரும்பாலான பகுதி பூமிக்குள் நுழையும்போதே எரிந்து போய்விடும்.

இருந்தாலும் அதன் சில பகுதிகள் அப்படியே வந்து விழ வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாசா இணைதளத்தில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது, கடந்த 1950-ம் ஆண்டில் இருந்து செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இது வரை விண்ணில் செலுத்தப்பட்ட எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில் வந்து விழுந்து யாரும் காயம் அடைந்ததாகவோ, பொருட்சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை.

யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோள் 6.5 டன் எடை கொண்டது. இது கடந்த 2005-ம் ஆண்டில் செயல் இழந்தது. இதைவிட பெரிய செயற்கைக்கோள்கள் எல்லாம் பூமிக்குள் எரிந்து விழுந்துள்ளன. இதனால் யாருக்கும் காயம் ஏற்பட்டதில்லை.

செயல் இழந்த செயற்கைக்கோள்களை கடலில் விழச்செய்வது தான் வழக்கம். ஆனால் யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோளில் எரிபொருள் இல்லாததால் அதன் செயல்பாட்டை கட்டுப்படுத்த முடியாது. எனவே, அது தானாக வந்து பூமியில் விழும். அதன் பெரும்பாலான பகுதிகள் வளிமண்டலத்திலேயே எரிந்துவிடும்.

யு.ஏ.ஆர்.எஸ். பூமிக்கு வர இன்னும் ஒரு சில மாதங்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது எப்பொழுது விண்ணில் இருந்து கிளம்பும் என்று உறுதியாகக் கூறமுடியாது.

அது பெரும்பாலும் அமெரிக்காவில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறு அது விழுந்தால் 750 கி.மீ. பரப்பளவில் அதன் பாகங்கள் சிதறி விழலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *