தேர்தல் தோல்விக்கு தி.மு.க., தொண்டர்களே காரணம் : கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: “”தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., மிகப்பெரிய தோல்வி அடைந்ததற்கு, தன் கட்சித் தொண்டர்களே காரணம்” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: உள்ளாட்சித் தேர்தல் விவரங்களை, தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு மட்டும் முன்கூட்டியே அறிவித்ததற்கு, ஆட்சியினர் மீது ஒரு வழக்கு தொடரலாம். தொகுதி விவரங்களை மறைத்து வைத்ததால், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால், வேட்பாளர்கள் தேர்விலும் அவசரம் ஏற்பட்டது. தொகுதி மாற்றத்தால், பலருக்கு சீட் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால், இதை நினைத்துக் கொண்டிருக்காமல், தொண்டர்கள் காலதாமதம் செய்யாமல், தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும். கடந்த காலத்தில், உள்ளூர் பிரச்னைகளில் தி.மு.க., செயல்பட்டதை, வாக்காளர்களுக்குச் சொல்ல வேண்டும்.

இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில், ஆட்சியினரை எதிர்த்துப் போட்டியிடுகிறோம். சட்டசபைத் தேர்தலில் மிருக பலத்துடன் வெற்றி பெற்று, கர்வத்தின் உச்சியிலுள்ள ஆளுங்கட்சியை எதிர்க்கிறோம். நமக்குள்ளே எழுந்த போட்டி காரணமாகவும், நம்மவர்கள் சிலர் நடந்து கொண்ட செயல்பாடுகளின் காரணமாகவும், சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அடைந்தோம். இதைப் பயன்படுத்தி, சட்டசபையில் ஆளுங்கட்சியினர் நம்மைப் பற்றி இழித்தும், பழித்தும் பேசுகின்றனர். இந்தச் சூழ்நிலைகளிலிருந்து நாம் விடுபட, உள்ளாட்சித் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று விடக்கூடாது என, தி.மு.க.,வினரை தேடிப்பிடித்து, பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளுகின்றனர். எனவே, முன்னணியினர் சிறைகளில் இருந்தால், அடுத்த மட்டத்திலுள்ளோர் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும்.

ஆட்சிப் பொறுப்பிலுள்ளோர், அனைத்து முறைகேட்டிலும் ஈடுபடக்கூடும். பணத்தை வாரி இறைத்து, வெற்றி பெற முயற்சிப்பர். தப்பித்தவறி, அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றால், எஞ்சியிருக்கிற கட்சிப் பிரமுகர்கள் மீதும், பொய் வழக்குப் போட முயற்சிப்பர். இதுமட்டுமின்றி, தி.மு.க., சார்பில் தற்போது போட்டியிடுவோர், கடந்த முறையும் போட்டியிட்டிருந்தால், அவர்கள் தங்கள் தேர்தல் செலவுக் கணக்கைக் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டாதவர்களின் வேட்பு மனுக்களை ரத்து செய்யும் முயற்சியில், மாநிலத் தேர்தல் ஆணைய உதவியுடன், ஆளுங்கட்சியினர் ஈடுபட இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே, இதில் கவனமாக இருக்க வேண்டும்.
இருக்கும் சில நாட்களில் தாமதிக்காமல், கிராமந்தோறும் ஓடிச்சென்று, தெருக்கள் தோறும், திண்ணை தோறும் இவற்றை விளக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *