சென்னை: “பரமக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த மூன்று பேர் குடும்பத்திற்கு,
தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்’ என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். வன்முறையை கட்டுப்படுத்தவே துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை: தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான, இம்மானுவேல் சேகரனின், 54வது நினைவு நாளை முன்னிட்டு, பரமக்குடியில் உள்ள அவரது சமாதியில், பல்வேறு அரசியல் கட்சியினரும் நேற்று மரியாதை செய்தனர். சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன், ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருவதை, போலீசார் தடை செய்திருந்தனர். தடையை மீறி பரமக்குடி நோக்கிச் சென்ற, ஜான்பாண்டியனை, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் போலீசார் கைது செய்தனர். ஜான் பாண்டியன் கைதை அறிந்த அவரது ஆதரவாளர்கள், போக்குவரத்தை சீர்குலைக்கும் வகையில், பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் சாலை மறியல் செய்தனர். கலைந்து செல்ல வலியுறுத்திய போலீசார் மீது கற்களையும் வீசி, வன்முறையில் ஈடுபட்டனர். வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம் மீதும் தீவைத்தனர். வன்முறையாளர்கள், போலீஸ் மீது கற்கள், பெட்ரோல் குண்டுகளை வீசியதால், தற்காப்புக்காகவும், பொதுச் சொத்தை பாதுகாக்கும் வகையிலும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், மூவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். இதில், டி.ஜ.ஜி., சந்தீப் மிட்டல், டி.எஸ்.பி., கணேசன், இன்ஸ்பெக்டர் அதிசயராஜ் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். ஜான்பாண்டியன் கைதைக் கண்டித்து, மதுரை சிந்தாமணி சந்திப்பிலும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்தனர். கல்வீச்சு தாக்குதலில் மூன்று போலீசார் காயமடைந்தனர். இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றபோது, தற்காப்புக்காக அவர் துப்பாக்கியால் சுட்டதில், இருவர் காயமடைந்தனர். சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், ஒரு சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற வன்முறை செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு, ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Leave a Reply