லண்டன்: பிரிட்டனில் சமீபத்தில் நடந்த
ஆய்வு ஒன்றின் மூலம், ஐந்து பிரிட்டன்வாசிகளில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள்,”பேஸ்புக்’ சமூக வலைத் தளம் மூலமே தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், மொபைல்போன் அல்லது வீட்டுத் தொலைபேசியை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை எனவும் தெரியவந்துள்ளது.
அகன்ற அலைவரிசை இணையதள சேவை நிறுவனமான “டாக்டாக்’ சமீபத்தில் பிரிட்டனில் ஓர் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் வீட்டுத் தொலைபேசி, மொபைல்போன்கள், “பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் அளித்த பதிலில் இருந்து, பிரிட்டனில், வீட்டுத் தொலைபேசிகளின் இடத்தை மொபைல்போன்கள் பிடித்துக் கொண்டது தெரியவந்தது. ஆய்வில் கலந்து கொண்டோரில் 40 சதவீதம் பேர் மொபைல்போன் மூலமே தொடர்பு கொள்வதாகவும், 22 சதவீதம் பேர் வீட்டுத் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதாகவும் தெரிவித்தனர். மொத்தம், ஒரு கோடியே 70 லட்சம் பேர், வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே வீட்டுத் தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர். வீட்டை விட்டு வெளியே சென்றுள்ள தங்கள் பிள்ளைகளைத் தொடர்பு கொள்வதற்கு மட்டுமே, பெற்றோர் வீட்டுத் தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர். மொபைல்போன்களுக்கு வீட்டுத் தொலைபேசிகளில் இருந்து அழைத்தால் அதிகமாக செலவாகிறது என்பதுதான் இதற்கு முக்கிய காரணம். அதேபோல், தங்கள் உடன் பணிபுரிபவர்களிடம் பேசுவதற்கு, வாரத்திற்கு 2.7 முறை “ஸ்மார்ட் போன்கள்’ எனப்படும் சகலவசதிகளும் கொண்ட போன்களை பயன்படுத்துகின்றனர். தங்கள் நண்பர்களுடன் பேச 2.6 முறை அந்தப் போன்களைப் பயன்படுத்துகின்றனர். 20 பேரில் ஒருவர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை தங்களுடன் பணிபுரிபவர்களுக்கு, மின் அஞ்சல் அனுப்புகிறார் என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேநேரம், பெரும்பான்மையானோரில், 25 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள், தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரில் தொடர்பு கொள்வதற்கே முன்னுரிமை அளித்துள்ளனர்.
Leave a Reply