புதுடில்லி : ரயில்களில் கிரிமினல் குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில்,
ரயில்வே பாதுகாப்புப் படைக்கு போலீசுக்கு உரிய அதிகாரம் அளிக்க, புதிய சட்டம் கொண்டுவர, ரயில்வே அமைச்சகம் முற்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என, தெரிகிறது.
ரயில்கள், ரயில்வே வளாகம் மற்றும் ரயில் நிலையங்களில் தற்போது ரயில்வே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகின்றனர். ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் நடைபெறும் கிரிமினல் குற்றங்களை தடுப்பது, கண்டுபிடிப்பது, வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது இவர்களது வேலையாக இருந்து வந்தது. ஆனால், ரயில்வே பாதுகாப்புப் படையினரோ, ரயில்வே சொத்துக்களை பாதுகாப்பதை மட்டும் கவனித்து வருகின்றனர்.தற்போது ரயில்களில், பயணிகளிடம் மயக்க மருந்து கொடுத்து வழிப்பறி மற்றும் கொள்ளையடிப்பது அதிகரித்து வருகிறது. நெடுந்தூர ரயில்கள், குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில்களில் பயணிகளின் உடைமைகள் கொள்ளை போவதும் அதிகரித்துள்ளது. மேலும், ரயிலில் பயணி ஒருவர் தன் பொருள் திருட்டு போய்விட்டது என புகார் தெரிவித்தால், எல்லை பிரச்னையை காரணம் காட்டி, ரயில்வே போலீசார் சாக்கு போக்கு சொல்வர். மதுரையிலிருந்து சென்னைக்கு போகும் ரயிலில் திருட்டு நடந்து விட்டால், சென்னையில் புகார் பதிவு செய்ய முடியாது.மதுரைக்குத் தான் போகணும் என்று, பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பர். மேலும், விசாரணை நடவடிக்கைகளை பாதிக்கும். ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கிரிமினல் குற்றங்கள் அதிகரித்துள்ளதால், இதைத் தடுக்க, ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு முழு அதிகாரம் அளித்து, கிரிமினல் குற்றங்களையும் அவர்களே வழக்கு பதிவு செய்து கண்டுபிடிக்கும் வகையில் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இதற்காக, ரயில்வே போலீசாரை வாபஸ் பெற்று, முழுக்க முழுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினரையே பயன்படுத்தவும், இந்தப் படையினருக்கு போலீசுக்கு உரிய அதிகாரத்தை வழங்கவும் ரயில்வே அமைச்சகம் தீர்மானித்துள்ளது.இதற்காக, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில், மசோதா கொண்டுவரப்படுகிறது. “பயணிகள் பாதுகாப்பு மசோதா 2011′ என, பெயரிடப்பட்ட இந்த மசோதா விஷயத்தில், பல்வேறு அமைச்சகங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், அவற்றின் அனுமதிக்காக காத்திருக்கிறது. மசோதா தயாராகிவிட்டால், அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். அமைச்சரவை ஒப்புதல் அளித்து சட்டம் ஆக்கப்பட்டால், ரயில்வே நிலையங்களில் மாநில அரசின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள ரயில்வே போலீசார் வாபஸ் பெறப்படுவர். முழுக்க முழுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினரே அனைத்து பொறுப்புகளையும் ஏற்பர்.
Leave a Reply