புதுடில்லி: நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பாதுகாப்பு தொடர்பான உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், ரயில்களில் உயர் வகுப்பு கட்டணங்களை உயர்த்துவது குறித்து, ரயில்வே துறை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக, ரயில்வே வாரிய அதிகாரிகள் கூறியதாவது:ரயில்வே துறையில் எரிபொருள் செலவானது, அதன் மொத்தச் செலவில் 18 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், கடந்த எட்டு ஆண்டுகளாக பயணிகள் கட்டணத்தை ரயில்வே துறை உயர்த்தாததால், ரயில்வேயின் நிதி நிலைமையும் திருப்திகரமாக இல்லை. எனவே, ரயில் கட்டண விகிதங்களை மாற்றி அமைக்க வேண்டுமென திட்ட கமிஷனும், ரயில்வே தொழிற்சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.”ரயில்வேயின் மொத்த வருவாயில் 30 சதவீதம், பயணிகள் கட்டணம் மூலம் வருகிறது. எனவே, இழப்புகளை சரிக்கட்டவும், ரயில்வேயின் வருவாயை மேம்படுத்தவும், ரயில்களில் அனைத்து வகுப்புகளின் கட்டணத்தையும் உயர்த்த வேண்டும். அதன் மூலம், 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்ட முடியும்’ என, ரயில்வே வாரியத்தின் முன்னாள் தலைவர் விவேக் சகாய் ஏற்கனவே யோசனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரயில்வே தொடர்பான 2010 -11ம் ஆண்டுக்கான ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை, கடந்த வெள்ளியன்று பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பயணிகள் சேவை மற்றும் ரயில் பெட்டிகள் பராமரிப்பு தொடர்பான செலவுகளைக் கூட சமாளிக்க முடியாமல், ரயில்வே துறை திணறி வருகிறது. 2008-09ல் பயணிகள் சேவை மற்றும் ரயில் பெட்டிகள் பராமரிப்பு தொடர்பான இயக்கச் செலவில், 15 ஆயிரத்து 268 கோடி அளவுக்கு ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.அதற்கு முந்தைய ஆண்டில் இழப்பு, 7 ஆயிரத்து 493 கோடி ரூபாய். எனவே, ரயில்வேயின் நிதி நிலைமையை மேம்படுத்த வேண்டுமெனில், பயணிகள் கட்டணத்தையும், சரக்கு கட்டணங்களையும் மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில்வே தொடர்பான பார்லிமென்ட் குழுவில் இடம்பெற்றுள்ள பல உறுப்பினர்களும், “ரயில்களில் பயணிகள் கட்டணத்தை குறிப்பிட்ட அளவுக்காவது உயர்த்த வேண்டும். இதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதோடு, டீசல் விலை உயர்வால் ஏற்படும் இழப்பையும் சரிக்கட்ட முடியும். மேலும், ரயில்வேயின் வருவாய் அதிகரிக்கும் போது, பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதோடு, ரயில்வே முறைகளிலும் மேம்பாட்டைக் கொண்டுவர முடியும்’ என தெரிவித்துள்ளனர். அதனால், ரயில்களில் உயர்வகுப்பு கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படலாம்.இவ்வாறு ரயில்வே வாரிய அதிகாரிகள் கூறினர்.
இருந்தாலும், இந்தத் தகவலை உறுதி செய்ய, ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி மறுத்து விட்டார். “”ரயில் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அது யோசனை அளவில் தான் உள்ளது,” என்றும் கூறினார்.
Leave a Reply