புதுடில்லி :”ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. சி.பி.ஐ., என்பது சுதந்திரமான ஒரு அமைப்பு.
குறிப்பிட்ட நபரை விசாரிக்க வேண்டும் என, எங்களை கட்டாயப்படுத்த முடியாது’ என, சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ., தெரிவித்தது.
“2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், அப்போதைய நிதியமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும்’ என, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான முந்தைய விசாரணையின் போது, நிதி அமைச்சகத்தால், பிரதமர் அலுவலகத்துக்கு எழுதப்பட்ட கடிதம் குறித்த தகவல்களையும், சுப்ரமணியசாமி, கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த கடிதத்தில்,”அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் நினைத்திருந்தால், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடக்காமல் தடுத்திருக்க முடியும்’ என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம், டில்லி அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “சிதம்பரம் பதவி விலக வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பி.ராவ் கூறியதாவது:இந்த வழக்கில் முதன் முதலாக, புதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களை சி.பி.ஐ., ஆய்வு செய்யும். இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அடுத்த விசாரணையின் போது, விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.இந்த வழக்கு, சிறப்பு கோர்ட்டின் விசாரணை வரம்புக்கு உட்பட்டது. எனவே, சுப்ரீம் கோர்ட் இதை கண்காணிக்க வேண்டியது இல்லை. எந்த ஒரு தனிப்பட்ட நபருக்காகவும் நான் ஆஜராகவில்லை. மத்திய அரசு சார்பாகவே ஆஜராகியுள்ளேன். சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என்ற மனு மீது, எந்த ஒரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு பி.பி. ராவ், தன் வாதத்தில் கூறினார்.
இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், தன் வாதத்தில் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் அமைச்சர் சிதம்பரத்தின் நடவடிக்கை குறித்து, விசாரிக்க வேண்டிய அவசியம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக, பிரதமர் அலுவலகத்துக்கு, நிதி அமைச்சகம் எழுதிய கடிதத்தில் புதிதாக எதுவும் இல்லை. இந்த ஆவணங்களை சி.பி.ஐ., பரிசீலிக்கும் என, மத்திய அரசு கூறியதை ஏற்க முடியாது. சி.பி.ஐ., ஒரு சுதந்திரமான அதிகாரம் கொண்ட அமைப்பு. விசாரணை நடத்தும்படி எங்களை வற்புறுத்த முடியாது. சிதம்பரத்துக்கு சி.பி.ஐ., ஆதரவு தெரிவிப்பது போன்ற ஒரு தோற்றத்தை, குறிப்பிட்ட சில மீடியாக்கள் உருவாக்கியுள்ளன.இவ்வாறு கே.கே.வேணுகோபால் கூறினார்.
இந்த வழக்கிற்கான மனுவை தாக்கல் செய்துள்ள, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி கூறுகையில்,”ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக, அமைச்சர் சிதம்பரத்துக்கு எதிராக, ஏராளமான ஆவணங்களைக் கொடுத்துள்ளேன். ஆனால், சி.பி.ஐ., அவற்றை புறக்கணித்து விட்டது’ என்றார்.
“உத்தரவை திரும்பப் பெற வேண்டும்’:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில், முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜா சார்பில் ஆஜரான, அவரது வழக்கறிஞர் சுஷில் குமார் கூறியதாவது:இந்த வழக்கில் சி.பி.ஐ., தன் விசாரணையை முடித்து விட்டதா, இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். விசாரணை கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து விட்டதாக, சி.பி.ஐ,, தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டில், விசாரணை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கின் உண்மையான நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். விசாரணை முடிந்து விட்டால், வாதம் தொடர வேண்டும். இந்த வழக்கில், எங்களின் பிரச்னையையும் பரிசீலிக்க வேண்டும்.ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் அளிக்க முடியாது என, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை தயவு கூர்ந்து, திரும்பப் பெற வேண்டும். ஜாமின் மனு தாக்கல் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.நம்பிக்கை துரோகம் செய்ததாக, இந்த வழக்கில் புதிய குற்றச்சாட்டை சி.பி.ஐ., வலியுறுத்தியுள்ளது. இது, விசாரணையை தாமதப்படுத்தும் நடவடிக்கை.இவ்வாறு சுஷில் குமார் கூறினார். இது தொடர்பாக எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க, சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் மறுத்து விட்டது.
Leave a Reply