ஆமதாபாத், செப். 30: பிரமாணப் பத்திரத்தில் தன்னிடம் வற்புறுத்திக் கையெழுத்துப் பெற்றதாக காவலர் கொடுத்த புகாரின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
2002, பிப்ரவரி 27-ல் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த உயர் நிலைக் கூட்டம் குறித்து தன்னை மிரட்டி தவறாக வாக்குமூலம் பெற்றதாக சஞ்சீவ் பட் மீது காவலர் பான்ட் புகார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கட்லோடியா காவல் நிலையத்தில், சஞ்சீவ் பட்டுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்து விசாரிப்பதற்காக அவரை அழைத்திருப்பதாக குஜராத் டி.ஜி.பி. சித்தரஞ்சன் சிங் கூறினார். அவரை கைது செய்யப் போவதில்லை. வாக்குமூலம் மட்டுமே பெறப்படும் என டி.ஜி.பி. தெரிவித்தார்.
2002-ல் சஞ்சீவ் பட்டின் கீழ் காவலர் கே.டி. பான்ட் பணிபுரிந்தார். அவர், சஞ்சீவ் பட்டின் மீது அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருந்ததாவது: கலவரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நடுநிலையாளர் விசாரணைக்கு வரவுள்ளதாகவும், அவரிடம் குஜராத் கலவரம் குறித்து விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் என்னிடம் வற்புறுத்தி வாக்குமூலம் பெற்றதாகத் தெரிவிக்குமாறு சஞ்சீவ் பட் வற்புறுத்தினார். அதற்கு மறுப்புத் தெரிவித்த என்னை சஞ்சீவ் பட் மிரட்டினார்.
மேலும், மாநில காங்கிரஸ் தலைவர் மோத்வாடியாவிடம் என்னை அழைத்துச் சென்றார். அவரும் சஞ்சீவ் பட் கூறியதன்படி நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதன் பின், வழக்குரைஞரிடம் அழைத்துச் சென்று 2 பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றார் என பான்ட் புகார் கூறியுள்ளார்.
முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்த சஞ்சீவ் பட், குஜராத் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடிக்கு பங்கிருப்பதாகவும், இது குறித்து அறிந்த பான்ட்டை சிறப்புப் புலனாய்வு குழுவினர் கைது செய்து மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.
Leave a Reply