சென்னை:காந்தியடிகளின் பிறந்த தினமான நேற்று, அவரது சிலைக்கு தமிழக கவர்னர் ரோசையா மற்றும் முதல்வர் ஜெயலலிதா, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தேசத் தந்தை மகாத்மா காந்தியின், 143வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, தமிழக கவர்னர் ரோசையா மற்றம் முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில், காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை, ராணி மேரி கல்லூரி, பிரம்ம குமாரி அமைப்பு, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இணைந்து, தேசபக்திப் பாடல்கள் பாடினர்.
காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய கவர்னர், சமூக ஆர்வலர்கள் பாடிய தேசபக்திப் பாடல்களை, ஐந்து நிமிடம் அமர்ந்து கேட்டார்.காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு, தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் செந்தமிழன், சைக்கிள் பேரணியைத் துவக்கி வைத்தார். இப்பேரணியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். காந்திய சிந்தனை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் அட்டைகளை, சைக்கிளில் பார்வைக்கு வைத்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில், சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள் செந்தமிழன், சின்னையா, ரமணா, கோகுல இந்திரா, தலைமைச் செயலர் தேவேந்திரநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply