ஜவுளி, தோல் காலணிகள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவதில்லை என்று சீனா முடிவெடுத்திருப்பதால் அந்த இடத்தை இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் நிரப்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்.
டெல்லியில் ஏற்றுமதியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாண்டெக் சி்ங், “சீனா தனது 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதுவரை முன்னுரிமை அளித்திருந்த ஜவுளி, தோல் காலணிகளை தவிர்ப்பது என்று முடிவு செய்துள்ளது. தனது நாட்டின் உள்நாட்டுப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அதிக இலாபம் தரும் மூலதன உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தப்போவதாக கூறியுள்ளது. எனவே அந்த இடத்தை இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் நிரப்ப வேண்டும். இல்லையென்றால் அந்த இடத்தை வியட்நாம், துருக்கி போன்ற நாடுகள் நிரப்பிவிடும்” என்று கூறியுள்ளார்.
இது மட்டுமின்றி, சீனாவில் தற்பொழுது அளிக்கப்படும் ஊதியத்தை 13 விழுக்காடு அதிகரிக்கப்போவதாக முடிவு செய்துள்ளனர். இதனால் அந்நாட்டின் பொருட்கள் பன்னாட்டுச் சந்தையில் கடும் போட்டியைச் சந்திக்க வேண்டியதிருக்கும். இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நமது ஏற்றுமதியை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்றும் மாண்டெக் சிங் கூறியுள்ளார்.
Leave a Reply