சென்னை சொதப்பல் கிங்ஸ்! * டிரினிடாட் அணி அசத்தல் வெற்றி

சென்னை: சாம்பியன்ஸ் லீக் போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்ப, சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பந்துவீச்சு, பேட்டிங்கில் கலக்கிய டிரினிடாட் அணி முதல் வெற்றியை வசப்படுத்தியது. தற்போதைய நிலையில் “நடப்பு சாம்பியன் சென்னை அணியின் அரையிறுதி கனவு அநேகமாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20 தொடர் நடக்கிறது. நேற்று இரவு சென்னையில் நடந்த “ஏ பிரிவு லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டிரினிடாட் அண்ட் டுபாகோ(வெ.இண்டீஸ்) அணிகள் மோதின. “டாஸ் வென்ற டிரினிடாட் அணி கேப்டன் டேரன் கங்கா “பேட்டிங் தேர்வு செய்தார்.
டிரினிடாட் அணிக்கு சிம்மன்ஸ், பெர்கின்ஸ் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். அஷ்வின், ஜகாதி சுழலில் தலா ஒரு சிக்சர் அடித்தார் பெர்கின்ஸ். ஜகாதி பந்தில் பெர்கின்ஸ்(34) வெளியேறினார். சகாவின் துல்லிய “த்ரோவில் சிம்மன்ஸ்(20) ரன் அவுட்டானார். அடுத்து வந்த டேரன் பிராவோ(1), டேரன் கங்கா(8), ராம்தின்(3) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய பரத், 23 ரன்களுக்கு போலிஞ்சர் பந்தில் போல்டானார்.
கடைசி கட்டத்தில் கெவான் கூப்பர் அதிரடியாக ரன் சேர்த்தார். போலிஞ்சர், டுவைன் பிராவோ பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார். 10 பந்தில் 28 ரன்கள் விளாசிய இவர், போலிஞ்சர் வேகத்தில் வீழ்ந்தார். கடைசி 5 ஓவரில் 49 ரன்கள் எடுக்கப்பட்டன. டிரினிடாட் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது.
சென்னை சார்பில் போலிஞ்சர் 3, ஜகாதி 2 விக்கெட் வீழ்த்தினர்.
விக்கெட் மடமட:
சுலப இலக்கை விரட்டிய சென்னை அணி திணறல் துவக்கம் கண்டது. “டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏனோதானோ என ஆடினர். ஆடுகளமும் மந்தமாக இருக்க ரன் வறட்சி ஏற்பட்டது. நரைன் பந்துவீச்சில் முரளி விஜய்(6), சுரேஷ் ரெய்னா(2) அவுட்டாகினர். ராம்பால் வேகத்தில் மைக்கேல் ஹசி(13) காலியானார். சகா(8)தாக்குப்பிடிக்கவில்லை. பத்ரிநாத் 26 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். இதையடுத்து 5 விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
பின் தோனி, டுவைன் பிரோவா இணைந்து போராடினர். ஷெர்வின் ஓவரில் பிராவோ அடுத்தடுத்து 2 பவுண்டரி அடிக்க, ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்த நேரத்தில் தோனி அவுட்டாக(7) நம்பிக்கை தகர்ந்தது. அடுத்து வந்த ஆல்பி மார்கல் கைகொடுக்க தனது போராட்டத்தை தொடர்ந்தார் பிராவோ.
6 பந்தில் 27 ரன்கள்:
கடைசி ஓவரில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டன. ஷெர்வின் கங்கா அசத்தலாக பந்துவீசினார். முதல் பந்தில் ஒரு ரன். அடுத்த இரு பந்தில் ரன் இல்லை. 4வது பந்தில் ஒரு ரன். கடைசி இரு பந்துகளை மார்கல் சிக்சருக்கு விரட்டிய போதும், பலன் எதுவும் கிடைக்கவில்லை. சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 111 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. பிராவோ(32), மார்கல்(18) அவுட்டாகாமல் இருந்தனர்.
டிரினிடாட் தரப்பில் சுழலில் அசத்திய நரைன் 4 ஓவரில் 8 ரன் மட்டும் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இவரே ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
வாய்ப்பு எப்படி?:
தற்போது 3 போட்டிகளில் சென்னை அணி 2 புள்ளிகள் தான் பெற்றுள்ளது. நாளை நடக்கும் போட்டியில் நியூ சவுத்வேல்ஸ் அணியை வீழ்த்த வேண்டும். அதற்கு பின் “ரன் ரேட் அடிப்படையில் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால், சென்னை அணி அரையிறுதிக்கு தகுதி பெறலாம்.

ஜகாதி காயம்
நேற்று 7வது ஓவரை சென்னை அணி வீரர் ஜகாதி வீசினார். 4வது பந்தை சிம்மன்ஸ் ஆக்ரோஷமாக அடித்தார். இடது கைக்கு நேராக வந்த “கேட்ச்சை நழுவ விட்டார். அந்த சமயத்தில் பந்து, நடுவிரலை பதம் பார்க்க, ரத்தம் கொட்டியது. நல்லவேளை பெரிதாக பிரச்னை ஏற்படவில்லை. சிகிச்சைக்கு பின் பந்துவீச்சை தொடர்ந்தார் ஜகாதி.

தோனி படுமந்தம்
நேற்று படுமந்தமாக பேட் செய்தார் சென்னை கிங்ஸ் கேப்டன் தோனி. 22 பந்தில் வெறும் 7 ரன்கள்(ஸ்டிரைக் ரேட் 31.81) எடுத்தார். இதே போல பத்ரிநாத் 26 பந்தில் 14 ரன்கள்(ஸ்டிரைக் ரேட் 53.84) எடுத்தார். இவர்கள் “டுவென்டி-20 போட்டி என்பதை மறந்து, டெஸ்ட் போல ஆமை வேக ஆட்டம் ஆடியதால் தான் படுதோல்வியை சந்திக்க நேரிட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *