தெலுங்கானா:சோனியாவிடம் அறிக்கை

posted in: அரசியல் | 0

புதுடெல்லி, அக்.1:ஆந்திர மாநில மக்களை ஆட்டிப் படைத்து வரும் தெலுங்கானா பிரச்சனைக்கு எத்தகைய முடிவு எடுப்பது என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அறிக்கை அளித்தார்.
.
தெலுங்கானா மாநிலத்தை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். ரெயில் மறியல், பந்த் என 18வது நாளாக தெலுங்கானா போராட்டம் நடைபெற்று வருகிறது.

இப்பிரச்சனைக்கு தீர்வு காண காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டு அறிக்கை அளிக்குமாறு குலாம்நபி ஆசாத்தை காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டிருந்தது. குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டார்.

தெலுங்கானா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டது. அந்தந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பிரதேசம் சார்ந்த நிலையை எடுத்துரைத்ததாக தெரிகிறது. அவர்களின் கருத்துக்களை கடந்த 3 மாதங்களாக கேட்டறிந்த பிறகு விவர அறிக்கை ஒன்றை குலாம் நபி ஆசாத் தயாரித்ததாக தெரிகிறது.

இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அவர் இந்த அறிக்கையை அளித்திருக்கிறார்.இதனை தொடர்ந்து தெலுங்கானா பிரச்சனையில் மத்திய அரசு விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *