மனநிலை பாதிக்கப்பட்டதை காரணம் காட்டி விவாகரத்து பெறலாம் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “மனநிலை பாதிக்கப்பட்டதற்கு ஆதாரம் காட்டி, கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், விவாகரத்து பெற முடியும்’ என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

அரியானாவைச் சேர்ந்தவர் பங்கஜ் மகாஜன். இவரது மனைவி டிம்பிளுக்கு மனநிலை தொடர்பான பிரச்னை இருந்து வந்தது. திருமணமான, இரண்டு மாதங்களில், இந்த விவகாரம், மகாஜனுக்கு தெரியவந்தது. இதன் காரணமாக, தன் மனைவியால், மகாஜனுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பலமுறை மகாஜனை, டிம்பிள் மிரட்டினார். இதைத் தொடர்ந்து, “என் மனைவி, மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது, திருமணத்துக்கு முன், எனக்குத் தெரியாது. அவரால் மிகவும் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறேன். எனவே, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தர வேண்டும்’ என, அரியானா ஐகோர்ட்டில், மகாஜன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சதாசிவம், சவுகான் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.

இதன் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: மனநிலை பாதிக்கப்பட்டதற்கான ஆதாரத்தைக் காட்டி, கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் விவாகரத்து பெறலாம். கோர்ட்டில் அதற்கான ஆவணங்களையும், மருத்துவச் சான்றிதழ்களையும் அளிக்க வேண்டும். இதுபோல் மிக மோசமான கொடுமைக்கு ஆளானாலும், விவாகரத்து பெறலாம். இந்த வழக்கை பொறுத்தவரை, சரியாக விவாதிக்காமலும், போதிய காரணங்கள் இல்லாமலும், மனுதாரரின் மனுவை, ஐகோர்ட் நிராகரித்துள்ளது. தன் மனைவி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதற்கு ஆதரமாக, மகாஜன் தாக்கல் செய்துள்ள சான்றிதழ்கள், எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. எனவே, தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு, மகாஜனுக்கு இந்த கோர்ட் அனுமதி அளிக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *