பெங்களூரில் நேற்றிரவு நடந்த மும்பை – கேப் கோப்ராஸ் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
சின்னசாமி மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் மும்பை இந்தியன்ஸ், கேப் கோப்ராஸ் அணிகள் மோதின. பூவா தலையா வென்ற கேப் கோப்ராஸ் அணி முதலில் மும்பை அணியை பேட் செய்ய அழைத்தது. பிளிஸ்சார்ட்டும், சருல் கன்வாரும் மும்பை அணியின் இன்னிங்சை தொடங்கினர்.
உத்தரபிரதேசத்தில் பிறந்தவரான கன்வார், சிக்சர் மழையாய் பொழிந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 6 ஓவர்களில் மும்பை அணி 59 ரன் குவித்தது. ஆனால் அடுத்த 5 ஓவர்களில் மும்பை அணியின் ஸ்கோர் குறைந்தது. கன்வார் 45 ரன்களிலும், பிளிஸ்சார்ட் 19 ரன்களிலும், அம்பத்திராயுடு 6 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
11 ஓவர்களுக்கு பிறகு ஆட்டம் மீண்டும் சூடுபிடித்தது. பொல்லார்ட், கேப் கோப்ராசின் பந்து வீச்சை சிதறடித்தார். இதனால் மீண்டும் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. பிராங்ளின் 18 ரன்களும், அரைசதத்தை கடந்த பொல்லார்ட் 58 ரன்களும், சைமண்ட்ஸ் 14 ரன்களும், ஹர்பஜன் சிங் 3 ரன்களும் எடுத்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. இதில் 14 பவுண்டரியும், 11 சிக்சர்களும் அடங்கும்.
மும்பை அணி பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரின் போது மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து மழை கொட்டி தீர்த்ததால் மேற்கொண்டு விளையாட முடியவில்லை. இதையடுத்து ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.
Leave a Reply