புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அமைச்சரவை எடுத்த முடிவை, சிதம்பரத்தால் மாற்றியிருக்க முடியாது என்று, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.
டில்லியில் தனியார் “டிவி’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சைக்குரிய குறிப்பு விஷயத்தை பொறுத்தமட்டில், அவரவர் பணிக்காலத்தில் ஒவ்வொரு பார்வை இருக்கும். நிதி அமைச்சராக சிதம்பரம் இருந்தபோது, அவரது பார்வையில் எடுக்கப்பட்ட முடிவு, பிரணாப் முகர்ஜி அத்துறையின் அமைச்சராக தொடரும் போது பார்வையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பொறுத்தமட்டில் அமைச்சரவை எடுத்த முடிவை சிதம்பரத்தால் மாற்றியிருக்க முடியாது. அமைச்சரவை முடிவு எடுத்த பின்னரும், ஏல முறைதான் வேண்டும் என சிதம்பரம் வலியுறுத்தினார். இருப்பினும், அமைச்சரவை முடிவு என்பதால் அவரால் தனியாக மாற்றியிருக்க முடியாது. அமைச்சரவை கூட்டத்தில் பல அமைச்சர்கள் ஆமோதித்து இருப்பர், ஒருவர் அல்லது இருவருக்கு அதில் மாறுபட்ட கருத்து இருக்கலாம். ஆனால், அமைச்சரவையில் முடிவு எடுத்த பிறகு, ஒன்றும் செய்வதற்கு இல்லை. இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.
பிரணாப் கருத்து: “2ஜி’ விவகாரத்தில், நிதி அமைச்சகம், பிரதமருக்கு அனுப்பிய குறிப்பை, சர்ச்சையாக்க முயற்சி நடக்கிறது. எனக்கும், சிதம்பரத்திற்கும் எவ்வித முரண்பாடும் இல்லை. எங்களுக்குள் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. அதே போல், நான் பதவி விலக விரும்புவதாக, பிரதமரிடம் கூறியதாக வெளியான தகவலும் கற்பனையானது’ என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
Leave a Reply