மதுபான புரட்சி!

‘பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதே அரசின் முக்கியக் கொள்கையாகும். கள்ள மதுபானம் அருந்தி மோசமாக பாதிக்கப்படும் மக்களின் சமூக பொருளாதார நலனை(!) மேம்படுத்தும் உறுதியான நோக்கத்தை செயல்படுத்துவதற்காக சீரிய கொள்கையை (டாஸ்மாக்) செயல்படுத்தி வருகிறது. இதனால் சமூக விரோதிகளிடம் சட்டவிரோதமாகப் பணம் சேருவதை கட்டுப்படுத்துவதிலும் அரசு கருவூலத்துக்கு வருவாய் சென்றடைவதையும் உறுதி செய்கிறது” – மதுவை விற்பதற்காக இப்படியொரு கேலிக்கூத்தை எந்த அரசாவது சொல்லத் துணியுமா? சட்டமன்றத்திலேயே இதைப் பதிவுசெய்யும் அளவுக்கு துணிச்சல் படைத்த அரசாக விளங்குகிறது ஜெயலலிதா அரசு.

p4

சரக்கு விற்று ஆண்டுதோறும் 22 ஆயிரம் கோடி ரூபாய் ‘கல்லா’ கட்டும் அரசுக்கு வருவாயில் தள்ளாட்டம் போல. அதனால், கூடுதலாக 2,500 கோடியை கல்லாவுக்கு கொண்டுவர மதுபானங்களின் விலையை 120 வரை உயர்த்தியிருக்கிறது. மதுபான விற்பனையில் புரட்சி(!) புரிந்துவரும் அரசின் சாதனைகள் இங்கே…
மதுவிலக்கு அமல்படுத்த முடியாத தமிழகத்தில் ‘மதுவிலக்கு’ பெயரில் ஒரு அரசு துறை என்பது எவ்வளவு முரண். ‘மது விற்பனை’ துறை என்பதை மாற்றிக்கொள்ள முடியாத ஆட்சியாளர்கள், அரசுக்கு சில்லறையையும் மக்களுக்கு கல்லறையையும் கட்டி வருகிறார்கள்.
‘மதுவிலக்கு சாத்தியம் இல்லை’ என சொல்லும் அரசு, மதுபான விற்பனையைக் கட்டுப்படுத்த மறுக்கிறது. ‘எலைட் ஷாப்’, பீர் மட்டும் விற்கும் மதுக்கடைகள் என மது விற்பனையில் நவீனத்தை புகுத்திக்கொண்டிருக்கிறது. தனியாரிடம் இருந்து மதுபான விற்பனையை அரசே விற்கும் முடிவை எடுத்தது, முந்தைய அ.தி.மு.க ஆட்சியில்தான்!
தமிழகத்தில் 11 மதுபான உற்பத்தி நிறுவனங்களும், ஏழு பீர் நிறுவனங்களும் ஒரு ஒயின் தயாரிக்கும் நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன. எம்.ஜி.ஆருக்குப் பிறகு கருணாநிதி ஆட்சியில் ஆறு நிறுவனங்களுக்கும் ஜெயலலிதா ஆட்சியில் ஏழு நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. மதுபான விற்பனையில் ஜெயலலிதா அரசு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது. 2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு நான்கு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியிருப்பதே இதற்குச் சான்று.
ஆயத்தீர்வை வருவாயைக் கணக்கிடவும் போலி மதுபானங்களின் விற்பனையைத் தடுக்கும் பொருட்டும் மதுபாட்டில்களில் செயற்கை இழை ஆயவில்லைகள் பயன்படுத்தப்படுகின்றன. சராசரியாக மாதத்துக்கு 22.26 கோடி ஆயவில்லைகள் இதற்குத் தேவைப்படுகின்றன. இதை கணக்கில் வைத்துப் பார்த்தால், ஒரு மாதத்துக்கு சராசரியாக 22 கோடி மது பாட்டில்கள் விற்பனையாகின்றன.
முந்தைய தி.மு.க ஆட்சியின்போது ஆண்டுக்கு சராசரியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் அதிகரித்து வந்தது. இப்போதைய அ.தி.மு.க ஆட்சியில் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் வருவாய் அதிகரித்து (பார்க்க பெட்டி செய்தி) வருவதை கணக்கு போட்டாலே மதுபான விற்பனைக்கு அரசு காட்டும் மும்முரம் புரியும்.
p5

‘மதுவால் வருவாய் இழப்பு நடந்துவிடக் கூடாது’ என்பதற்காக தமிழகத்தில் 45 மதுவிலக்குச் சோதனைச் சாவடிகளை அமைத்திருக்கிறார்கள். அத்துடன் போலி மதுபானம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிவிப்பதற்காக 10581 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி சேவையை நடத்தி வருகிறது. வருவாயைப் பெருக்கும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட இந்த இலவச கட்டுப்பாட்டு மையமும் அ.தி.மு.க ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது.
‘அரசு எடுத்துவரும் நடவடிக்கையால் 2011 முதல் கள்ளச்சாராய இறப்புகள் இல்லை’ என பெருமை பேசுகிறது தமிழக அரசு. டாஸ்மாக்கில் குடித்துவிட்டு குடிநோயாளிகள் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருப்பதையும், ஆல்கஹால் இறப்புகளையும் அரசு ஏனோ கணக்கு காட்ட மறுக்கிறது.

p6

சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு பெருந்தன்மையாக ஒரு கோடி(!)யை ஒதுக்கியிருக்கிறது. ஆயிரம் கோடிகளில் கரன்ஸி புழங்கும் டாஸ்மாக்கில், ஒரு கோடியை தூக்கி கொடுத்துவிட்டு அதற்கும் தம்பட்டம் போட்டுக்கொள்ளும் அரசை என்ன சொல்ல?
‘தமிழகத்தில் மதுவால் ஆண்டுதோறும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சுடுகாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள். குடிப்பழக்கத்தால் ஏற்படும் சமூக, மருத்துவக் கேடுகளை சரிசெய்ய 40 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக செலவாகிறது’ என சுகாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மதுவினால்தான் சாலை விபத்துகள், பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என புள்ளிவிவரங்கள் சொல்லப்பட்டாலும், ‘தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது’ என பல்லவி பாடுகிறது அரசு.
அரசியல் பின்புலத்துடன் இயங்கும் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆட்சியாளர்களின் கரிசனப் பார்வை எப்போதும் உண்டு. அதில் இரண்டு திராவிட கட்சிகளும் சளைத்தவை இல்லை. எலைட் டிஸ்டில்லரீஸ், எஸ்.என்.ஜெ டிஸ்டில்லரீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தி.மு.க ஆட்சியில் வளம் கொழித்தன. இப்போது மிடாஸுக்கு சுக்கிர தசை.
மக்களைப் படிக்க வைக்க வேண்டிய அரசு குடிக்க வைத்துக்கொண்டிருக்கிறது!
– எம்.பரக்கத் அலி, படம்: எம்.விஜயகுமார்

விலை உயர்வு ஏன்?
கறவை மாடு, லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, பசுமை வீடுகள், அம்மா பெயரில் இயங்கும் திட்டங்கள் ஆகியவைதான் எம்.பி தேர்தலில் வாக்குச்சாவடியில் வாக்குகளை அள்ளிக் கொடுத்தது. இன்னும் மக்களுக்கு அள்ளிக் கொடுத்தால் சட்டமன்றத் தேர்தலில் அறுவடை செய்யலாம் என்பது அரசின் திட்டம். அதற்கு கரன்ஸி வேண்டும். பால், பாஸ், மின் கட்டண உயர்வு என வசூலிக்கப்பட்டுவிட்டது. இனியும் வசூலிக்க முடியாது. இருப்பது ஒரே வழிதான். அதனால் டாஸ்மாக் மதுபானத்தின் விலையை உயர்த்தியிருக்கிறது என கோட்டையில் பலமாக பேச்சு அடிபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *