“ரஜினியின் உதவியை மறுத்துவிட்டேன்!” தமிழருவி மணியனின் பண அனுபவம்

*“ரஜினியின் உதவியை மறுத்துவிட்டேன்!” தமிழருவி மணியனின் பண அனுபவம்*
“பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி யிருக்கிறார். வறுமையின் கோரத்தை நன்கு உணர்ந்த பாரதியார் நண்பருக்கு எழுதும்போது, `எப்பாடு பட்டேனும் பொருள் தேடுக’ என்று எழுதியிருக்கிறார். பணம் இல்லையென்றால், இந்த உலகில் உங்களால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது என்பது உண்மை. அதே நேரத்தில் மிகப்பெரிய அளவில் பணத்தைச் சேர்த்தீர்கள் எனில், அதுவே சுமையாகிவிடும்”- தன் நீண்ட

நெடிய அனுபவத்திலிருந்து தீர்க்கமாகப் பேசுகிறார் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன்.
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு… படிப்பிலும் எழுத்திலும் தீவிர கவனம் செலுத்திவரும் அவர், பணம் தொடர்பான தனது அனுபவங்களை நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்…
“செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நாவலூர்தான் என்னுடைய பூர்வீகம். ஏராளமான மாந்தோப்பு, சவுக்குத் தோப்பு, வயல்கள் என அங்கு எக்கச்சக்கமான சொத்துகள் என் அப்பாவுக்கு இருந்தன அவையெல்லாம் என் தாத்தா சேர்த்தவை. அப்போதெல்லாம் அங்கு பெரிய வளர்ச்சி கிடையாது. என் அப்பா ரயில்வேயில் பணியாற்ற வந்தபிறகு, `இவை தேவையற்ற சொத்துகள். பெரிதாக வளராது’ என்று கொஞ்சம் கொஞ்சமாக விற்றுவிட்டார்.
மூன்று பெண் பிள்ளைகள், மூன்று ஆண் பிள்ளைகள் என்று மொத்தம் நாங்கள் ஆறு பிள்ளைகள். எங்கள் ஆறு பேரையும் நன்கு படிக்க வைக்கவும், என் மூன்று சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைக்கவும்தான் என் அப்பா சொத்துகளை விற்றாரே ஒழிய, அவர் எதையும் விரையமாக்கவில்லை.
நான் படித்து முடித்ததும் சென்னை, சூளையில் உள்ள இந்து ஒற்றுமைக் கழக மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணிக்குச் சென்றுவிட்டேன். 24 ஆண்டுகளும் அதே பள்ளியில்தான் பணியாற்றினேன். என்னுடைய முதல் சம்பளம் 300 ரூபாய். 1995-ல் விருப்ப ஓய்வு பெற்றேன். அப்போது என்னுடைய சம்பளம் 5,000 ரூபாய்.
எனக்கு எப்போதும் பணத்தின் மீது பெரிய பற்று இருந்தது இல்லை. நான் மாநிலக் கல்லூரியில் படிக்கிறபோதுதான் மகாத்மா காந்தியின் `சத்திய சோதனை’யை முதன் முதலாகப் படிக்கத் தொடங்கினேன். அதில், `உடமை அற்றவனின் உள்ளத்தில் இருந்துதான் உண்மையான அன்பு பிறக்கும்’ என்கிறார் காந்தியடிகள். உடமைகள் இருந்தால் அதன் மீதுதான் பற்று இருக்கும். அதைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் மனம் துடிக்கும். நான் காந்தியைப் படித்து, காமராஜரைப் பார்த்து வளர்ந்தவன். அவர்களைப்போல வாழ வேண்டும் என்று முடிவெடுத்து இன்றுவரை அப்படி வாழ்ந்துகொண்டிருப்பவன். நான் திருமணம் செய்ததிலிருந்து இப்போதுவரை வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். இப்போது நான் வசிக்கக்கூடிய இந்த வீடு 12-வது வாடகை வீடு. இந்த உலகத்தில் எனக்கென ஒரு சதுர அடி சொத்துகூட கிடையாது.
அதற்காக நான் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு மனிதனுக்கு என்ன அடிப்படைத் தேவையோ, அவை எனக்கு இருந்தது. இருப்பதற்குத் தகுந்தாற்போல் வாழப் பழகிக்கொண்டேன். அப்போதெல்லாம் வீட்டு வாடகை 125 ரூபாய்தான். வீட்டு வாடகை கொடுத்து, என் இரு பிள்ளைகளை வளர்த்து குடும்பம் நடத்த நான் வாங்கிய சம்பளம் எனக்குப் போதுமானதாக இருந்தது. சுருக்கமாக, பணத்தைத் தேவை இல்லாமல் நான் சேர்ப்பதும் இல்லை; விரையப்படுத்துவதும் இல்லை.
பல நடுத்தரக் குடும்பங்கள் கடன்படுவது திருமணச் செலவுகளால்தான். என் மகளுக்கும் மகனுக்கும் திருமண செலவுகளை நான் எப்படிச் செய்தேன் தெரியுமா? திருமணம் செய்ய வேண்டும்என்று முடிவெடுத்ததும் ஶ்ரீராம்சிட் ஃபண்டில் ஒரு லட்சம் ரூபாய் சீட்டு சேர்ந்தேன். இறுதி சீட்டாக எடுத்து அந்த ஒரு லட்சம் ரூபாயுடன் நேராக ஹோட்டல் பாம்குரோவுக்குச் சென்றேன். ‘‘இவ்வளவுதான் என்னிடம் இருக்கிறது… மண்டபம், புரோகிதர், வாழை மரம் உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கான தொகை போக எத்தனை பேருக்கு சாப்பாடு போட முடியும்’’ என்று கேட்டேன். 100 பேருக்கு சாப்பாடு போடலாம் என்றார்கள். மிகச் சரியாக 100 பேரை அழைத்து திருமணம் செய்தேன். என் பிள்ளைகளின் படிப்புக்கும் பெரிய செலவு இல்லை. இருவருமே அரசுப் பள்ளியிலும் அரசுக் கல்லூரியிலும் இலவசமாகத்தான் படித்தார்கள்.
ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டு வந்தபிறகு, நான் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு மதிப்பூதியம் என்று குறிப்பிட்ட தொகை கொடுப்பார்கள். அந்தத் தொகையை முழுக்க முழுக்க ஏழைப் பிள்ளைகளின் உயர்கல்விக்கும் ஏழைப் பெண் பிள்ளைகளின் திருமணத்துக்கும் தான் பயன்படுத்தியிருக்கிறேன். அந்தத் தொகையில் நானோ, என் மனைவியோ என் குடும்பமோ இதுவரை ஒரு தேநீர்கூட அருந்தியது கிடையாது. என் அறிவைக்கொண்டு பெறுவது எதுவாக இருந்தாலும் அது பிறர் அறிவைப் பெருக்கவும் பிறர் ஏழ்மையை அகற்றவும்தான் பயன்பட வேண்டும் என்று என் மனைவியிடம் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். உண்மையில் என் மனைவி எனக்குக் கிடைத்த வரம்தான். அவளும் என்னைப் போலவே, தேவைக்கு மீறி ஆசைப்படாத குணம் உடையவள். பட்டுப் புடவை வேண்டும், தங்க நகை வேண்டும் என்று ஒருபோதும் அவள் என்னிடம் கேட்டதே இல்லை.
நானும் அப்படித்தான். என்னுடைய 40-வது வயதில்தான் முதன் முறையாக ஒரு ஸ்கூட்டர் வாங்கினேன். ஸ்கூட்டரின் விலை 11,600 ரூபாய். அதுவரைக் கும் சைக்கிள்தான். அந்த ஸ்கூட்டரை 20 ஆண்டுகள் ஓட்டினேன். நடிகர் சிவகுமார் என் அண்ணன் மாதிரி. நான் ஸ்கூட்டரிலேயே வருவதைப் பார்த்துவிட்டு, ‘`இவ்வளவு வயதானதற்குப் பிறகும் நீங்க ஸ்கூட்டர் ஓட்டுவது அவ்வளவு பாதுகாப்பானதில்லை மணியன்’’னு அக்கறையோடு சொன்னார். அதன்பிறகு, அந்த ஸ்கூட்டரை ஒருவருக்கு இலவச மாகக் கொடுத்துவிட்டேன். அதன்பிறகு, என்னுடைய நண்பர் ஒருவருடைய பழைய காரை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன். நான் ஓய்வுபெற்றபோது செட்டில்மென்ட் தொகையாகக் கிடைத்த மூன்று லட்சம் ரூபாயி லிருந்துதான் ஒரு லட்சம் ரூபாய் காருக்காக எடுத்தேன். அந்த காரை 15 வருடம் வைத்திருந் தேன். சமீபத்தில்தான் அதை அப்புறப்படுத்தினேன்.
என் மனைவிக்கு இருதய அறுவைசிகிச்சையும், வால்வு மாற்று அறுவைசிகிச்சையும் அடுத்தடுத்து செய்ய வேண்டிய சூழல் வந்தபோது, அண்ணன் வைகோ, ஜி.கே.வாசன், நடிகர் சிவகுமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என நிறைய பேர் உதவ முன்வந்தார்கள். உங்கள் அன்பு போதும் என்று திட்ட வட்டமாக மறுத்துவிட்டேன். இதய அறுவைசிகிச்சையை அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டத்தில் செய்தோம். வால்வு மாற்று அறுவைசிகிச்சைக்கு என் மகன் வாங்கிய வீட்டை விற்று செலவு செய்தோம். அதைக் கேள்விப்பட்ட ரஜினிகாந்த், ‘‘ஐயா, இதற்காக வீட்டை விற்கணுமா? நான் தந்துவிடுகிறேன்’’ என்று சொன்னார். ‘‘உங்கள் அன்பு போதும்’’ என்று கறாராகச் சொல்லிவிட்டேன்.
இதுபோன்ற நெருக்கடியான சூழலில் நம்மிடம் பணம் இல்லை என்றால் அவ்வளவுதான். அப்படி யான சூழலில்தான் பலரும் தடம் மாறிப் போகிறார்கள். ஆனால், அதுதான் நமக்கான சோதனை. எந்தச் சூழலிலும் நாம் நம் தடம் மாறாமல் இருக்க வேண்டும் என்கிற உறுதிகொண்டவன் நான்.
இதுதான் என்னுடைய பொருளாதார வாழ்க்கை. என் வாழ்வில் ஒரு லட்சம் ரூபாயெல்லாம் நான் சம்பளம் வாங்கியது கிடையாது. கலைஞர் கருணாநிதி ஐந்தாவது முறை முதலமைச்சராக இருந்தபோது, எனக்குப் பாரதியார் விருது கொடுத்தார். அதற்கு ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் சான்றிதழும் கொடுத்தார்கள். அந்த ஒரு லட்சம் ரூபாயை அப்படியே வங்கியில் டெபாசிட் செய்தேன். வருடத்துக்கு 7,000 வட்டியாகக் கிடைத்தது.
இதையெல்லாம் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஏனெனில், பலரும் இப்படி வாழ்வதற்கும் தயாராக இல்லை. வாழ்வதை நம்பவும் தயாராக இல்லை. என் இத்தனை ஆண்டுக்கால வாழ்வில் எத்தனையோ பெரிய மனிதர்களுடன் பழகியிருக்கிறேன். அரசியல் தலைவர் களுடன் நட்பு வைத்திருக்கிறேன். ஆனால், ஒருவரிடம் கூட கைநீட்டியது இல்லை என்பதைக் கம்பீரத்துடன் என்னால் சொல்ல முடியும்.
எனக்கு இப்போது 26,000 ரூபாய் ஓய்வூதியம் வருகிறது. என் மகன் மாதம்தோறும் 10,000 ரூபாய் அனுப்புகிறான். இந்த 36,000 ரூபாய் என்பது எனக்கும் என் மனைவிக்கும் போதுமானது. தேவைக்கேற்ப பணம் இருந்தால், அது உண்மையிலேயே வரம். தேவைக்கு மீறி பணத்தைக் குவித்தால் அதுவே சாபமாகிவிடும். எந்த இன்பமாக இருந்தாலும், அந்த இன்பத்தின் நிழலாக ஒரு துன்பம் தொடர்ந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். என் வாழ்க்கையை நான் நேர்கோட்டில் அமைத்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் அந்தப் புரிதல்தான்..!’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *